எல்லையில் சீனாவின் அடாவடி அத்துமீறலுக்கு பழிவாங்க சீன பொருட்களை புறக்கணிக்கும் மக்கள்

எல்லையில் வாலாட்டிக்கொண்டிருக்கும் சீன ராணுவம், சமீபத்தில் பெரும் மோதலை நடத்தியது. 20 இந்திய வீரர்கள் இறந்தனர்; பதிலடியில் 30 சீன ஜவான்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மக்களை கொந்தளிக்க செய்தது. நாடு முழுவதும், ‘நோ சீனா பொருட்கள்’ என்ற கோஷம் கிளம்பி பரவி வருகிறது. மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சீன பொருட்களை குறைக்க துவங்கி விட்டனர். எனினும், சீன ஸ்மார்ட் மொபைல் போன்கள் ஒரு சில மணி நேரத்தில் இந்தியாவில் விற்றுத்தீர்ந்தது தான் பலரையும் அதிர வைத்தது. சமூகவலைத்தளங்களில் இந்த போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு, சீன பொருட்களை புறக்கணிக்க கோரி விவாதங்கள் நடந்து வருகின்றன.

சீன பொருட்கள் பல நாடுகளிலும் குண்டூசி முதல் ஸ்மார்ட் டிவி வரை பரவி விட்டது. சீனாவுக்கு ஆண்டுக்கு இந்தியா 1 லட்சம் கோடி பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. மொத்த ஏற்றுமதியில் இது 5 சதவீதம் தான். அதே சமயம், ஸ்மார்ட் மொபைல் போன் முதல் பிள்ளையார் வரை என்று கணக்கு பார்த்தால் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு சீனாவிடம் இருந்து நாம் இறக்குமதி செய்கிறோம். மொத்த இறக்குமதியில் இது 15 சதவீதம். மொபைல் சந்தையில் இருந்து சாதா பொருட்கள் சந்தை வரை இந்திய வர்த்தகத்தில் 15 முதல் 50 சதவீதம் வரை சீன ஆதிக்கம் உள்ளது. பங்குச்சந்தையில் 30 சதவீதம் வரை அதன் கை உள்ளது.

என்ன காரணம், சாதா ட்யூப்லைட்டில் ஆரம்பித்து, மொபைல் வரை எல்லாமே, சீன பொருள் என்றால் விலை மலிவு தான். மக்களின் பொருளாதார நிலையை  அறிந்து தான் சீனா பல நாடுகளில் தன் வர்த்தக கொடியை நாட்டி வருகிறது.

மொபைலில் எடுத்துக் கொண்டால், 50 சதவீதம் வரை சீன போன்கள் தான் விற்பனை. விவோ, ரியல்மி, வோப்போ எப்படி கொடிகட்டிப்பறக்கிறது என்பது பலருக்கும் தெரிந்தது தானே. டிக் டாக் - இந்த ஆப் சீனாவில் கூட அதிக அளவில் மக்கள் பயன்படுத்துவதில்லை; ஆனால், இந்தியாவில் கிராமங்கள் வரை கூட பரவிக்கிடக்கிறது. என்ன தான் இப்படி சீனா ஆதிக்கம் செலுத்தினாலும், மக்களிடம் ‘நோ சீனா பொருட்கள்’ எப்போது இயக்கமாக மாறி விட்டதோ, அப்போதே சரிவு ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம். நடக்குமா இந்த போர்க்கோலம்.

Related Stories: