×

அம்மன் கோயிலில் பெண் குழந்தை மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை நரசமங்கலம் அம்மன் கோயிலில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த மப்பேடுவில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலை கொட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட நரசமங்கலம் கிராமத்தில் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று நேற்று கிடந்ததை அவ்வழியாக சென்ற அப்பகுதி மக்கள் கண்டனர். இதுகுறித்து உடனடியாக மப்பேடு போலீசாருக்கும், திருவள்ளூர் தாசில்தாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு எஸ்.ஐ.சுரேஷ் தலைமையில் போலீசார் மற்றும் தாசில்தார் ஆகியோர் விரைந்து சென்று பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிப்பு பிரிவில் நலமுடன் உள்ளது. இந்த பெண் குழந்தையை அம்மன் கோயிலில் விட்டுச் சென்றது யார்? கள்ளத் தொடர்பால் பிறந்து இது போன்ற செயலில் யாராவது ஈடுபட்டனரா, வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Amman Temple , Amman Temple, Girl Child, Rescue
× RELATED பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை லலிதா ஹோமம்