×

காஞ்சியில் இருந்து திருவள்ளூருக்கு 25 லாரிகளில் வந்த நெல் மூட்டைகள்

* 5 நாட்களாக மழையில் நனைந்து வீணாகும் அவலம்
* நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மெத்தனம்

திருவள்ளூர்: காஞ்சிபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து, நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்துக்கு வந்த 25க்கும் மேற்பட்ட லாரிகள், அதிகாரிகள் மெத்தனத்தால் கடந்த 5 நாட்களாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு, மழையில் நனைந்து வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை முடிந்து, விவசாயிகளிடம் இருந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலமாக திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், நெல் மூட்டைகளை சரிபார்த்து, அதே லாரியில் அரவைக்காக, குறிப்பிட்ட நவீன அரிசி ஆலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்குவது வழக்கம். அங்கு அரவை முடிந்ததும் அரிசியானது அந்தந்த தாலுகாக்களில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பப்படும். பின்னர் ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு, காஞ்சிபுரத்தில் இருந்து நெல் ஏற்றி வந்த 25க்கும் மேற்பட்ட லாரிகள், அரிசி ஆலைகளுக்கு செல்ல அனுமதி பெறுவதற்காக கடந்த 5 நாட்களாக திருவள்ளூர் ஆயில்மில் அருகே நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்க வேண்டிய நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளோ இதை கண்டும் காணாமல் மெத்தனமாக உள்ளனர். இதனால் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தினமும் பெய்யும் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இந்த நெல் மூட்டைகளை உடனடியாக நவீன அரிசி ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்ப மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

* டிரைவர்கள் புலம்பல்
லாரி டிரைவர்கள் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில் கடந்த 5 நாட்களாக போதிய உணவு கூட கிடைக்காமல், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரியின் அனுமதிக்காக காத்துக்கிடக்கிறோம். அனுமதி வழங்கினால் சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் நெல் மூட்டைகளை இறக்கி விட்டு சென்று விடுவோம். 16 டன் பாரம் ஏற்றும் தகுதியுள்ள லாரிகளில் 20 டன் நெல் மூட்டைகள் ஏற்றி விடுகின்றனர். ஒரே இடத்தில் 20 டன் எடையுடன் லாரிகளை நிறுத்தி வைத்தால் லாரிகள் சேதமடையும். எனவே, லாரிகளை விரைந்து அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thiruvallur ,Kanchi , Kanchi, Thiruvallur, 25 lorry, paddy bags
× RELATED திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள்...