×

சோழவரம் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி

புழல்: சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோழவரம், நல்லூர், பாடியநல்லூர், ஆத்தூர், ஆங்காடு, விச்சூர், காரணோடை, புதிய மற்றும் பழைய எருமைவெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 225 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதியானது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சோழவரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 25 வயதான ஆயுதப்படை காவலருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே காவல் நிலையத்தில் ஏற்கெனவே ஒரு காவலர் நோய்தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நல்லூர் ஊராட்சி, திருவள்ளூர் நெடுஞ்சாலை, ராஜிவ்காந்தி நகரில் வசிக்கும் 17 வயது சிறுவனுக்கு கிட்னி பழுதடைந்தது. இதனால் பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுவன் பரிதாபமாக பலியானார். அவனுக்கு கொரோனா பரிசோதனை செய்து, இன்னும் முடிவு வெளிவரவில்லை. அந்த சிறுவனின் உடலை தக்க பாதுகாப்புடன் நல்லூர் நாகாத்தம்மன் கோயில் அருகே உள்ள சுடுகாட்டில் நேற்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

* சுகாதார ஆய்வாளர் பாதிப்பு
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், கோவில்பதாகை, அண்ணனூர், மிட்டனமல்லி முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் கோரோனா தொற்றால் பாதிப்பு, இறப்பு எண்ணிக்கை தொடர்கிறது. இதற்கிடையில், இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று முன்தினம் ஒரே நாளில் 26 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 349 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 250 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஆவடி மாநகராட்சியில் பணிபுரியும் 45 வயது சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் மதுரவாயலில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், நேற்று முன்தினம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தந்தை பெரியார் நகரை சேர்ந்த 42 வயது நபர், திருமுல்லைவாயல், நாகம்மை நகரை சேர்ந்த 75 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை மீட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆவடி, கொளத்தூரில் உள்ள சுடுகாட்டில் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்தனர். இதனையடுத்து, இதுவரை பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது.


Tags : policeman ,police station ,Cholavaram , Cholavaram Police Station, Armed Forces Police, Corona
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...