×

கொரோனா பரவலைத் தடுக்க போலீஸ் - பொதுமக்கள் கூட்டுக்குழு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க போலீஸ்-பொதுமக்கள் இணைந்த கூட்டுக்குழு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் ஆயுதப்படை மைதானத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டங்களுக்கு உட்பட்ட குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், காவல் நண்பர்கள் குழு, தன்னார்வலர்கள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் எஸ்பி சாமுண்டீஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊரகப் பகுதியில் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு, இதில் ஒரு காவலர், ஒரு தன்னார்வலர், ஒரு காவல் நண்பர், மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பொறுப்பாளர் அல்லது ஆசிரியர் ஓருவர் உறுப்பினராக இருப்பார்.

அதேபோல் நகரத்தில் அங்காடி தெருக்களில் மேலே குறிப்பிட்ட உறுப்பினர்களுடன், வணிகர் சங்க பிரதிநிதிகளும் அடங்கிய குழு அமைக்கப்படும். இந்தக் குழு பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து தங்கள் பகுதிக்கு யாரேனும் வந்தால், உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பார்கள். மேலும் தங்கள் பகுதியில் உள்ள கடைகள், வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் இரண்டு தினங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வதை உறுதி செய்வார்கள். இதுபோன்று காஞ்சிபுரம் உட்கோட்டத்தில் இதுவரை 43 குழுக்களும், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் 56 குழுக்களும் என மொத்தம் 99 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களை சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வழிநடத்துவார்கள் என மாவட்ட எஸ்பி சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

Tags : Police - Public Coalition ,Corona Spread ,Corona Spread Police - Public Coalition , Corona spread, police - public, collective
× RELATED ஜேஎன்.1 வகை கொரோனா பரவலா? பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்