×

எல்லையில் போர் மூளும் சீனாவை எளிதில் தாக்க தயாராகிறது தஞ்சை விமானப்படை தளம்: பிரமோஸ் ஏவுகணைகளுடன் சுகோய் போர் விமானங்கள் ஆயத்தம்

தஞ்சை: போர் மூண்டால் சீனாவை தாக்க தஞ்சை விமானப்படை தளம் தயாராகி வருகிறது. தஞ்சை விமானப்படை தளம் 1940ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2ம் உலகப் போரில் இது செயல்பாட்டில் இருந்தது. இங்கிலாந்து விமானப்படையை சேர்ந்த விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டன. இந்நிலையில் தென்னிந்தியாவின் பாதுகாப்பு, குறிப்பாக அண்டை நாடுகளின் மூலம் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சமாளிக்க தஞ்சை விமானப்படை தளத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயார் செய்யும் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்தன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை விமானப்படை தளத்திலிருந்து சுகோய் போர் விமானங்கள் இயக்குவதற்கு தேவையான பணிகளும் நடந்தன.

கடந்த 2013ம் ஆண்டு தஞ்சை விமானப்படை தளத்தை, அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தரம் உயர்த்தப்பட்ட விமானப்படை தளமாக அறிவித்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். தொடர்ந்து, இங்கு சுகோய் போர் விமானங்கள் மூலம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. சுகோய் 30 ரக போர் விமானத்திலிருந்து தரை இலக்கை நோக்கி பிரமோஸ் ஏவுகணையை வீசும் சோதனை கடந்த 22.3.2019ம் ஆண்டு விமானப்படையால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை விமானப்படைத் தளத்தை மேலும் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இங்கு சுகோய் 30 விமானங்களை கொண்ட ஒரு படைபிரிவாக “டைகர் ஷார்க்ஸ்” என்ற 222வது போர் விமானப்படை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

இதில் பிரமோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 சுகோய் 30, ரக போர் விமானங்கள் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட்டன. அப்போது முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத் இதை தொடங்கி வைத்து கூறும்போது, இந்த படை பிரிவில் எதிர்காலத்தில் அதிகளவு வீரர்கள் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்படும் என்றார். இதையடுத்து தஞ்சை விமானப் படை தளம் தென்னிந்திய தீபகற்பகத்தில் மிகவும் பலம் வாய்ந்த தளமாக மாறியது. முக்கியமாக சீனா, இந்திய பெருங்கடலில் தன்னுடைய நட்பு நாடுகள் மூலம் படை தளத்தை நிறுவி வரும் நிலையில் தஞ்சை விமானப்படை தளத்தை தரம் உயர்த்தி பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான ஒன்றாக அமைந்துள்ளது.

இதற்கிடையே, இந்திய-சீனா எல்லையான கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 15, 16ம் தேதியில் இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் சுமார் 40 பேரும் பலியாயினர். இதனால் லடாக் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. அதே சமயம், பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவ, தூதரக ரீதியாக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வரும் இடங்களுக்கு அருகே அந்நாட்டு விமானப்படை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ரோந்து வருகின்றன.

எல்லை கட்டுப்பாடு கோட்டிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவுக்கு அருகில் சீன போர் விமானங்கள் அடிக்கடி பறந்து ரோந்து செல்கின்றன. இதனால், சீன ராணுவம் மற்றும் அதன் விமானப்படை எந்த தவறான செயலிலும் ஈடுபடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவமும் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தி இருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் உறுதி செய்துள்ளன. இதன் மூலம், பதற்றம் மிகுந்த பகுதியில் எந்த எதிரி போர் விமானங்கள் பறப்பதையும் தடுக்க முடியும். இதில் தரையிலிருந்து வான் இலக்கை தகர்க்கும் அதிநவீன ஆகாஷ் ஏவுகணையும் இடம்பெற்றுள்ளது.

இது அதிவிரைவாக பறக்கும் போர் விமானங்களையும், டிரோன்களையும் சில நொடிகளில் மிகத்துல்லியமாக தாக்கி வீழ்த்தும் திறன் கொண்டவை. அதோடு, இந்திய விமானப்படையின் போர் விமானங்களும் கிழக்கு லடாக் பகுதியில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. சில நிமிடங்களில் அவை சமவெளியில் உள்ள விமான தளங்களில் இருந்து பறந்து எல்லை பகுதிக்கு நகரும் வகையில் தயார் நிலையில் உள்ளன. இருதரப்பிலும் எல்லைகள் படைகள் குவிக்கப்படுவதாலும், ஏவுகணைகள் நிறுத்தப்படுவதாலும் போர் பதற்றம் அதிகமாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சீன ராணுவம் அதிதிறன் படைத்த போர் விமானமான சுகாய் 30 மற்றும் சக்தி வாய்ந்த அதன் வெடி பொருட்களையும் இந்திய எல்லைக்கு மிக அருகில் நகர்த்தி வருகிறது.

இந்திய நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவுக்கு வரை அதன் விமான ரோந்து பணியையும் நீட்டித்துள்ளது. தவுலக் பெக் ஓல்டியின் சப் செக்டார் நார்த், கல்வான் பள்ளத்தாக்கின் பேட்ரோலிங் பாயின்ட் 14, 15, 17 மற்றும் 17ஏ, பாங்காங்க் திசோ, பிங்கர் ஏரியாவை ஒட்டிய ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலும் சீன போர் விமானங்கள் வாலாட்டிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், லடாக்கில் தற்போது ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னையால் சீனா வாலாட்டினால் இந்தியா பதிலடி கொடுக்கும் என்ற நிலையில் தஞ்சை விமானப்படை தளம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மணிக்கு 3700 கி.மீ. வேகத்தில் 290 கி.மீ. தொலைவு செல்ல கூடிய பிரமோஸ் ஏவுகணையுடன் கூடிய சுகோய் 30 ரக விமானங்கள் மூலம் சீனாவை எளிதில் தாக்க முடியும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு பணியில் தஞ்சை விமானப்படை தளமும் முக்கிய பங்காற்றும் என்பது உறுதியாகியுள்ளதாக விமானப்படை தளங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: விமானப்படையை பொறுத்தவரை இந்தியா வலுவாக, தெளிவான திட்டத்துடன் உள்ளது. இது சீனாவுக்கே தெரியும். விமானப்படை தலைமை தளபதி 2 தினங்களுக்கு முன் கூறுகையில், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். தக்க பதிலடி கொடுப்போம என்று தெரிவித்துள்ளார். தஞ்சை விமானப்படைத் தளத்தில் சுகோய் 30 ரக போர் விமானங்களை கொண்ட “டைகர் ஷார்க்ஸ்” என்ற படைபிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் மூலம் பிரமோஸ் ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தலாம். இது பிரமோஸ் ஏவுகணை உலகத்திலேயே அதிகவேகமாக சென்று தாக்கக்கூடியது. 15 வருடமாக நாம் அதை வைத்துள்ளோம். இதை நாம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளோம். சீனா நமக்கு பயம் காட்டினாலோ, தாக்கினாலோ இந்த ஏவுகணை மூலம் எளிதில் சமாளிக்கலாம். தஞ்சையில் விமானப்படை தளம் அமைக்க காரணம் சீனா மற்றும் பாகிஸ்தானின் பார்வையில் இருந்து தள்ளி இருக்கிறது. அதோடு தமிழகத்தில் கூடங்குளம், கல்பாக்கத்தில் அணுமின் நிலையங்கள் உள்ளது. இதை பாதுகாக்க இந்த விமானப்படை தளம் உதவியாக இருக்கும்.

ஒருவேளை போர் மூண்டால் இந்தியாவில் உள்ள இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய 3 கடல் பரப்புக்கும் இங்கிருந்து விரைந்து சென்று தக்க பதிலடி கொடுக்க முடியும் என்றார். தஞ்சை விமானப்படைத் தளத்தில் சுகோய் 30 ரக போர் விமானங்களை கொண்ட “டைகர் ஷார்க்ஸ்” என்ற படைபிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம் பிரமோஸ் ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தலாம். சீனா நமக்கு பயம் காட்டினாலோ, தாக்கினாலோ இந்த ஏவுகணை மூலம் எளிதில் சமாளிக்கலாம்.

Tags : War ,China ,Soldiers ,China Tanzanian Air Force ,Sukhoi , Border, War, China, Tanjore Air Force Base, Promos Missile, Fighter Planes
× RELATED அமெரிக்கா - சீனா மோதல் உலகை...