×

தேனி மாவட்டத்தில் ஆட்டுக்கறி ‘தவணை’க்கு விற்பனை: விலையும் சரிந்தது

தேனி: தேனி மாவட்டத்தில் வாராந்திர தவணைக்கு ஆட்டு இறைச்சி விற்பனை நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.600  ஆக இருந்தது. அக்டோபர் மாதம் தீபாவளி அன்று விலை கிடுகிடுவென உயர்ந்து 800 ரூபாயினை தாண்டியது. 2020 ஜனவரி மாதம் ஒரு கிலோ 600 ரூபாய் ஆக குறைந்தது. அதன் பின்னர் மெல்ல உயர்ந்து வந்தது. மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் தொடங்கியதும் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி விலை 1300ஐ எட்டியது. ஜனவரி முதல் மார்ச் வரை பிராய்லர் கோழிக்கறி மூலம் நோய் பரவுகிறது என்ற தகவல் பரவியதால், கோழி இறைச்சி விற்பனை படுபாதாளத்திற்கு சரிந்தது.

ஆனால் மார்ச் மாதம் பிராய்லர் கோழி இறைச்சி மூலம் எந்த நோயும் பரவாது என கால்நடைத்துறை விளக்கம் அளித்தது. பின்னர் மக்கள் பிராய்லர் கோழி வாங்க தொடங்கினர். தொடர்ந்து ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்ற பிராய்லர் கோழி இறைச்சி கிடுகிடுவென உயர்ந்து 240 ரூபாய் வரை அதிகரித்தது. அதேபோல் மீன் விலையும் 40 சதவீதம் உயர்ந்தது. மார்ச் முதல் ஜூன் கடைசி வரை தொடரும் ஊரடங்கு மக்களின் வாழ்க்கை தரத்தை புரட்டிப்போட்டு விட்டது. பெரும்பாலான குடும்பங்களின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை அடைந்து விட்டது. ஆடு, கோழி, மீன் வாங்க கூட மக்களிடம் பணம் இல்லை. இறைச்சி கடைகள் காற்றாட தொடங்கியது.

இதனால் ஆட்டு இறைச்சியின் மவுசு குறைய தொடங்கியது. விலையும் 1300 ரூபாயில் இருந்து 900ம் ரூபாய் ஆக சரிந்தது. அதேபோல் ஆட்டு எலும்பு, குடல், ஈரல் என எல்லாமும் விலை சரிவை சந்தித்தன. பிராய்லர் கோழி இறைச்சியும் 240 ரூபாயில் இருந்து 170 ரூபாய் ஆக சரிந்தது. இதனையும் வாங்க கூட மக்களிடம் பொருளாதார பலம் இல்லை. வேலையிழப்பு, வருவாய் முடக்கம், ஊரடங்கு எல்லா வகைகளிலும் மக்களை வீழ்த்தி விட்டது. ஆட்டு இறைச்சி விற்பனையாக விட்டால், பிரிட்ஜ்மூலம் பாதுகாக்க வேண்டும். பழைய கறி என தெரிந்தால் யாரும் வாங்க மாட்டார்கள். எனவே ஆட்டை அறுத்தால் முழு இறைச்சியையும் விற்க வேண்டிய நிர்பந்தம் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆட்டு இறைச்சியை தவணைக்கு விற்பனை செய்து கொள்கின்றனர். பணமே இல்லாவிட்டாலும், இறைச்சி எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரம், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட அளவு தவணை செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஆட்டு இறைச்சி விற்கின்றனர். கிராமங்களில் இந்த வழக்கம் பல ஆண்டுகளாக இருந்தாலும், நகர்ப்புற பொருளாதார வீழ்ச்சி நகர்பகுதி மக்களையும் ‛கடனுக்கு இறைச்சி’ வாங்கும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது என மக்கள் புலம்புகின்றனர்.


Tags : district ,Price ,Theni ,Salem , Theni, lamb, installment sales
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை