×

கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை முதல்வர் சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார்...! மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை முதல்வர் சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். போலீசாரால் உயிரிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை முதல்வர் சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார். நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர்  இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள அவர் இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும்  போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Pennix ,Jayaraj ,Dwight ,Stalin ,CBI , Jayaraj, Pennix, CM, CBI investigation, MK Stalin
× RELATED மனைவியுடன் தகாத உறவு வாலிபருக்கு கத்திவெட்டு