×

குலசேகரன்பட்டினம் அருகே ராட்சத பள்ளம் தோண்டி மணல் திருடிய கொள்ளையர்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருகே  மெயின் ரோட்டை ஒட்டிய பகுதியிலேயே வழித்தடம் அமைத்து மணல் அள்ளிச் சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள உடன்குடி வட்டாரப்பகுதியை மத்திய அரசு வறட்சிப்பகுதியாக அறிவித்துள்ளது. இதனையடுத்து பல லட்சம் மதிப்பீட்டில் ஜல்சக்தி அபியான் திட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் உடன்குடி அனல்மின் நிலைய பணிகள் இரவு பகலாக நடந்து வருவதால் உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், நகனை, படுக்கபத்து, குரும்பூர் என பல பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாருவதாக கூறி பல லட்சம் டன் மணலை கொண்டு நிரப்பும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதியான அனல்மின்நிலையம் அமையும் பகுதியில் மழைவெள்ள நீர் தேங்கி நின்றது.

இதனால் பல மாதங்களாக அனல்மின்நிலைய பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது மழை வெள்ளநீர் வடிந்துவிட்டதால் மீண்டும் அனல்மின்நிலையத்தில் பள்ளங்களாக உள்ள பகுதியை மணல் கொண்டு நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதனையடுத்து கல்லாமொழி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக லாரி, ஜேசிபியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தீதத்தாபுரம், ஆதியாக்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டிலிருந்து காட்டுப்பகுதிக்கு செல்ல வழித்தடம் அமைத்து அரசுக்குச் சொந்தமான நிலத்தில் பல அடி ஆழத்திற்கு ஜேசிபி மூலம் தோண்டி மணல் எடுத்துள்ளனர். அதற்கு முன்னர் அந்த பகுதியில் இருந்த உடைமரங்கள், பட்டுப்போன பனைமரங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தியுள்ளனர். இதில் மூன்று அடி ஆழத்திற்கு ஆற்றுமணல் இருப்பதால் மணல் கொள்ளையர்கs; அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தான் சரள், களிமண் உள்ளது. இதனையடுத்து மணல் கொள்ளையர்கள் இரவு பகலாக மணல் அள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உடன்குடி அனல் மின்நிலைய, துறைமுக பணிக்கு கல், மணல் தினமும் ஏராளமான லாரிகளில் கொண்டு செல்வதால் போலீசார் வாகன சோதனையில் அந்த லாரிகளை சோதனையிடுவது கிடையாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆற்றுமணல், செம்மணலை கடத்தி வருகின்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர்கள் புகார் எழுப்பியும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து முறைகேடாக மணல் கொள்ளை நடைபெறா வண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Burglars ,Gulasekaranpattinam , Kulasekaranpattinam, Giant groove, sand stealing robbery
× RELATED தொண்டாமுத்தூர் அருகே டீக்கடையில் 37...