×

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கந்தலான நெல்லை - தூத்துக்குடி 4 வழிச்சாலை பாலம்: துறைமுக நகரத்தின் பயணத்தில் பெரிய ‘ஓட்டை’

நெல்லை: நெல்லை அருகே வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கம்பீரமாக உழைத்த பிரிட்டிஷ் பாலத்திற்கு மாற்றாக அமைத்த நான்குவழிச் சாலை பாலம் ஓட்டை விழுந்து கந்தலாகி காட்சியளிக்கிறது. 3 மாதங்களாகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நெல்லை தாமிரபரணி மேம்பாலம் மற்றும் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் இன்றும் சரித்திர அடையாளமாக காட்சியளிக்கின்றன. அதன் கட்டுமானங்கள் காண்போரை வியக்க வைக்கும்.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்ட பாலங்கள் வாகன ஓட்டிகளை அடிக்கடி பரிசோதிக்கின்றன. அதில் ஒன்றாக வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் திகழ்கிறது. நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலை, 47 கிமீ கொண்டதாகும். தூத்துக்குடி துறைமுகத்தையும், நெல்லை மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 2004ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கர சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்காக ரூ.232 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு ஒப்பந்த தொகையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

அரைகுறையாக நான்கு வழிச்சாலை நின்ற நிலையில், இவ்விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது.  பின்னர் ஒரு வழியாக 2010ம் ஆண்டு சுமூக தீர்வு ஏற்பட்டு ரூ.320 கோடிக்கு புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை பணிகள், 2012 நவம்பர் மாதம் நிறைவு பெற்றன. அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் இச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், சாலையில் காணப்படும் பாலங்கள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது.

அதற்கேற்ப 2017 நவம்பர் மாதத்தில் நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாடு பாலத்தில் திடீரென ஓட்டை விழுந்தது. வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, மறுபாலம் வழியாக இயக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிபுணர்கள் குழு மற்றும் சாலை மேம்பாடு குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினர் பாலப்பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தினர். அதன்பின்னர் தரமான கான்கிரீட் கலவைகளோடு அந்த ஓட்டை சீர் செய்யப்பட்டது. 6 மாதங்களுக்கு பின்னர் அப்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில் 2வது முறையாக கடந்த மார்ச் 14ம் தேதியன்று தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரும் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் இரு இடங்களில் ஓட்டை விழுந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாலம் ஓட்டை விழுந்த சில நாட்களில் கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஜூன் 1ம் தேதி பொதுபோக்குவரத்து தொடங்கியது. ஆனால் இன்று வரை பாலத்தை சீரமைக்க நடவடிக்கை இல்லை. பாலத்தின் ஒரு பக்கமாக பேரிகார்டுகளை வைத்து, வாகனங்கள் அங்கு செல்லாதவாறு தடுப்பு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து வரும் வாகனங்கள் பாலத்தில் வரும்போது மெதுவாக நின்று கடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலையில் விழுந்த ஓட்டை பல மாதங்களாக கவனிக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகளை அதிரச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சில சமயங்களில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து ேகாரிக்கை விடுத்தும், அதை கண்டு கொள்வாரில்லை. எனவே விபத்து ஆபத்தை உணர்ந்து நான்கு வழிச்சாலை பாலத்தை சீரமைத்து சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடமையாகும்.

பொறியியல் துறையின் தோல்வி
வல்லநாடு பாலத்தில் தொடர்ந்து விழும் ஓட்டைகள் குறித்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுகன் கிறிஸ்டோபர் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் நான்குவழிச்சாலைகளில் ஒப்பந்த பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவு பெற அதிக காலம் பிடித்தது. அதிலும் வல்லநாடு பாலத்தில் தரமான கான்கிரீட் கலவை போடப்படவில்லை. ஏற்கனவே ஒருமுறை ஓட்டை விழுந்த நிலையில், அங்கு போக்குவரத்தை நிறுத்தி, இரு பாலங்களிலும் பைபர் சீட் விரித்து, அதன் மேல் தார் போட்டனர். இப்போது மீண்டும் மற்றொரு பாலத்தில் கான்கிரீட் உடைந்து காட்சியளிக்கிறது.

இப்பாலத்தை அதிகாரிகள் கீழ் இறங்கி ஆய்வு செய்தபோது, மேலும் 4 இடங்களில் இத்தகைய பொத்தல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்விரு பாலங்களின் அருகே காணப்படும் ஆங்கிலேயர் காலத்து பாலம் இன்னமும் கம்பீரமாக காட்சியளிக்கும் நிலையில், புதிதாக போடப்பட்ட பாலங்கள் அடிக்கடி பெயர்ந்து நிற்கின்றன. இது பொறியியல் தொழில்நுட்பங்களுக்கான தோல்வியை காட்டுகிறது. 2 பாலங்களிலும் தரமான கான்கிரீட் கலவைகள் போட்டு சீரமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.’’ என்றார்.

டெல்லி அதிகாரிகள் வருகை
வல்லநாடு பாலத்தில் விழுந்துள்ள ஓட்டை குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘வல்லநாடு பாலத்தில் தற்போது விழுந்துள்ள ஓட்டை குறித்து டெல்லியில் உள்ள தேசிய சாலை ஆய்வு நிறுவன (சிஆர்ஆர்ஐ) அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகாரிகள் குழு டெல்லியில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அக்குழு ஆய்வு பரிந்துரைகளுக்கு பின்னரே பாலம் முழுமையாக சரி செய்யப்படும்.’’ என்றனர்.

Tags : Thamirabarani ,bridge ,Paddy - Thoothukudi 4 Road , Thomaraparani, Paddy - Thoothukudi 4 Road, Bridge
× RELATED உளவுத்துறை ரிப்போர்ட், ரூ.4 கோடி...