×

சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை ஏஜென்சியிடம் ஒப்படைத்து பல கோடி ஊழல்: கரும்புள்ளி நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம்

விழுப்புரம்: தமிழகத்தில் கொரோனா அவசர தடுப்பு பணிக்கு ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் 2,715 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பும் பணியை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்ததில் பலகோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. கருப்பு புள்ளிகள் பெற்ற ஏஜென்சிக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளின்படி 5 ஆயிரம் பேருக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட வேண்டும். இவர்களின் முக்கிய பணியாக டெங்கு, காலரா, சிக்குன் குனியா தடுப்பு, கொள்ளை நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 1987ம் ஆண்டில் 11 ஆயிரத்து 500 சுகாதார ஆய்வாளர்கள் இருந்தனர்.

அப்போது மக்கள் தொகை 4 கோடியாக இருந்தது. தற்போது மக்கள் தொகை இரு மடங்காகியுள்ளது. ஆனால் தற்போதும், சுகாதார ஆய்வாளர்கள் 2,500 பேர் தான் இருக்கின்றனர். அனைத்து துறைகளில் ஆட்குறைப்பு உத்தரவால் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற நிலையை மாற்றி 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒருவர் நியமிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். இதிலும் நிலை ஒன்று, நிலை இரண்டு என இரு பிரிவுகளாக பணி செய்து வந்தனர். தற்போது தமிழ்நாட்டில் குறைந்தது 8 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார ஆய்வாளர்கள் தேவைப்படுகின்றனர். கடந்த பத்தாண்டுகளாக சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பதால் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தமுடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பணியிடங்களை நிரப்புவதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வட்டாரசுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சிவகுரு கூறுகையில், தமிழகத்தில் கடந்த 1995ம் ஆண்டிலிருந்து புதியநிலை - 2 சுகாதார ஆய்வாளர் பணிநியமனத்தை பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு, மருத்துவ இயக்குநரகம் நிறுத்தியது. இதன்காரணமாக 11 ஆயிரம் சுகாதார ஆய்வாளர் இருக்கவேண்டிய இடத்தில் 2,500க்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனோ வைரசால் தமிழகத்தின் அனைத்துமாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாத தமிழக அரசு தற்போது 2,715 சுகாதார ஆய்வாளர்கள் நிலை- 2 பணியிடங்களை, அரசுப்பணியாளர் பணிஅமைப்பு விதிமுறைகளுக்கு புறம்பாக அவுட்சோர்ஸ் மூலம், அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் நியமனம் செய்துகொள்ள உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சில மாவட்டங்களில் 300 பணியிடங்கள் வரை பூர்த்தி செய்யப்பட்டன. அவுட்சோர்ஸ் முறையில் தனியார் ஏஜென்சிகள் மூலம் நியமனம்செய்வதற்கு ஆளும் கட்சி தரப்பில் நெருக்கடிகள் கொடுத்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட 5 ஏஜென்சிகளுக்கு இந்த ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டு அவர்களாகவே ஆட்களை தேர்வு செய்து, அந்தந்த மாவட்ட மருத்துவப்பணிகள் இணைஇயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார்கள். ஏஜென்சிகள் அனுப்பிய நபர்களுக்கு மட்டுமே ஆணை வழங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு நபரிடமும் குறைந்தது ரூ.50ஆயிரம்முதல் ரூ.1 லட்சம்வரை பணம்பெற்றுக்கொண்டு இந்த ஆணையை வழங்கியுள்ளனர். அவுட்சோர்சிங் முறையில் நியமிப்பதற்குக்கூட ரூ.10 கோடிவரை முறைகேடுநடந்துள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்திடவேண்டும் என்றார்.

ஏஜென்சியிடம் ஒப்படைத்தது ஏன்?
ஏஜென்சிமூலம் இந்த ஊழியர்களை நியமனம் செய்தால் அரசுக்கு எதிர்காலத்தில் எந்தவித பிரச்னையும் வராது. பணிநிரந்தரம், சம்பள உயர்வு போன்ற எதுவும் அரசிடம் கேட்க முடியாது. மற்றொருபக்கம், அரசுக்கும் ஏஜென்சி மூலம் கமிஷனும் கிடைக்கிறது. இந்த இரண்டு காரணங்களாலேயே, சுகாதாரஆய்வாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டங்களில் தேர்வு செய்யாமல், ஏஜென்சியிடம் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழல் புகாரில் சிக்கி அனுமதி ரத்து செய்யப்பட்ட ஒரு ஏஜென்சியை மீண்டும் தற்போது உள்ளே அனுமதித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் லேப்டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை சப்ளை செய்த தனியார் ஏஜென்சி ஊழல் புகாரில் சிக்கி, சமூக வலைதளங்களில் வீடியோவும் வெளியானதால், தமிழக அரசு அதன்அனுமதியை ரத்து செய்து வெளியேற்றியது. தற்போது, மீண்டும் சுகாதாரத்துறை ஆய்வாளர் பணியிடங்களுக்கு அந்த ஏஜென்சியிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு அனுமதியளித்தது ஏன்? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

3 மாதமாக சம்பளம் போடவில்லை முழு சம்பளமும் இனி கிடைக்காது
தனியார்ஏஜென்சிமூலம் சுகாதாரஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கவில்லை. காரணம், ஏஜென்சியினர் மாதந்தோறும் சம்பளத்தில் ரூ.3 முதல் ரூ.5 ஆயிரம் வரை பிடித்தம் செய்து கொள்வார்களாம். அதனாலேயே முதல் மூன்று மாதசம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளார்களாம். மேலும், தமிழகஅரசு நேரடியாக இந்தசம்பளத்தை ஏஜென்சிக்கு அனுப்பிய பிறகுதான், சம்பளத்தை அந்த தனியார் ஏஜென்சியினர் எப்போது வேண்டுமானாலும் வழங்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் புலம்பி வருகின்றனர்.

Tags : health inspector agencies ,agency , Health inspector, agency, corruption, blacksmithing agency, contract
× RELATED பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த...