×

30 சதவீதம் மட்டுமே சேல்ஸ்; டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிந்தது: வருமானமில்லாததால் ஒதுங்கிச்செல்லும் குடிமகன்கள்

* டாஸ்மாக் கடைகளில் 30 சதவீத வியாபாரம் மட்டுமே நடக்கிறது..
* இரவு 7 மணிவரை விற்பனை நேரம் அதிகரித்தும் வாங்க ஆளில்லை.
* சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, விற்பனை மந்தமாக உள்ளது.

சேலம்: தமிழகத்தில் நேரத்தை அதிகரித்தும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிந்துள்ளது. தற்போது 30 சதவீத சரக்குகள் மட்டுமே  விற்பதாக பணியாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் பூரணமதுவிலக்கு கேட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் சேலத்தை சேர்ந்த தியாகி சசிபெருமாள், மதுக்கடைகளை அகற்றகோரி, குமரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டது. ஆனாலும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. இது ஒரு புறமிருந்தாலும் வழக்கத்தை விட அதிகமாகவே மதுவிற்பனை தொடர்ந்தது. இதற்கு முடிவே கிடையாது என்று முடிவு செய்யப்பட்ட நேரத்தில் கொரோனாவின் தாக்கம், அனைத்து கடைகளுக்கும் பூட்டு போட வைத்தது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் கடந்த மார்ச் 25ம் தேதி முதல்  மூடப்பட்டது.

ஏறக்குறைய 40 நாட்கள், தமிழகத்தில் மதுவின் வாடை இல்லாமல் இருந்தது. இது ஒரு அரிய வாய்ப்பு. அதை அப்படியே பின்பற்றி, மதுவின் பிடியில் இருந்து மக்கள் மீண்டு வருவார்கள் என்று சமூக மேம்பாட்டு அமைப்புகள் மகிழ்ச்சி தெரிவித்தன. ஆனால் ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இங்குள்ள மக்கள், அம்மாநில எல்லைப்பகுதிக்கு மது அருந்த செல்வதால் குழப்பங்கள் ஏற்படும் என்று கூறியதோடு, மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 41 நாட்களுக்கு பிறகு, மே 7ம் தேதி மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. குடிமகன்கள் ஆனந்தக்கூத்தாடி மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கிக்குடித்தனர். இதில் மே 7 மற்றும் 8ம் தேதிகளில் மட்டும் ₹290 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை விதித்தனர். ஆனால் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி பெற்றது. இதனால் மே16ம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதில் முதல் நாளில் மட்டும் ₹133 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இந்த விற்பனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கோடு காலை 10 மணி முதல் மாலை 5 மணியாக இருந்த விற்பனை நேரம், காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை என்று அதிகரிக்கப்பட்டது. தற்போது இந்த நேரத்திற்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடந்து வருகிறது. ஆனால், பொதுமக்களின்  கையில் போதிய வருமானம் இல்லாததால் நாளுக்கு நாள் டாஸ்மாக் விற்பனை சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 30 சதவீத வியாபாரம் மட்டுமே நடப்பதாக டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சாதாரண நாட்களில் ₹30 முதல் ₹40 கோடிக்கு மது விற்பனை இருக்கும். அதே தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட திருவிழா நாட்களில் வழக்கத்தைவிட விற்பனை அதிகமாக இருக்கும். தமிழக டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை அதன் விற்பனைக்கும், வருமானத்திற்கும் ஆணி வேராய் திகழ்பவர்கள் ஏழை,எளிய கூலித்தொழிலாளர்கள் தான். 40 நாட்களுக்கும் மேலாக வீட்டில் முடங்கிக் கிடந்தவர்கள்,மே 7ம் தேதி கடை திறந்தவுடன் கடன்வாங்கியும், வீட்டில் உள்ள  பொருட்களை அடகு வைத்தும் சரக்குகளை வாங்கிக் குடித்தனர். இதே போல் ஒரு சிலர்,மனைவி சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து வந்தும் மது அருந்தினர்.

தற்போது இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வாய்ப்பில்லாமல் போனது. அதே நேரத்தில் தொழில்களும் ஊரடங்கால் முடங்கி கிடக்கிறது. இதனால் பலர் வேலையிழந்து வருவாய்க்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் நாளுக்கு நாள் கூட்டம் குறைந்து வருகிறது. வழக்கமாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, விற்பனை கடும் மந்தமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 30 சதவீத விற்பனை மட்டுமே நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Tasmac ,Citizens ,stores , Task shop, sales plummeted, citizens
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...