×

வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனாவால் 6 ஆயிரம் மேடை அலங்கார தொழிலாளர்கள் பாதிப்பு

* ஊரடங்கால் ஆடம்பர விழாக்கள் இல்லை
* வருவாய் இன்றி தவித்து வருவதாக வேதனை

திருவண்ணாமலை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 97.02 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.90 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 4.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 957 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த கொடிய கொரோனாவால் இருந்து பாதுகாக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது வரை தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது தளர்வு ஏற்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் திருமணம், நிச்சயதார்த்தம், காதுகுத்து, பாராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் ஆடம்பரமின்றி எளியமுறையில் நடத்தப்படுகிறது. இத்தகைய ஊரடங்கு உத்தராவால் பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் அந்த தொழில்களையே நம்பியிருந்த தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். அதேபோல் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்சிகளில் பெரிதும் முக்கியத்துவமாக இருந்து வருவது ேமடை அலங்காரங்கள். இத்தகைய மேடை அலங்காரங்களே அந்த விழாக்களுக்கு மேலும் அழகு சேர்த்து வருகிறது. இத்தகைய ேமடை அலங்கார தொழில்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆடம்பரமாக நடத்த வேண்டிய திருமணங்கள், திருவிழாக்கள் பொலிவிழந்து மிகவும் எளிமையாக நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மேடை அலங்காரங்கள் திருமண விழாக்களில் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது ஆடம்பரமான திருமணங்கள் நடைபெறாமல், மிகவும் எளிமையாக மணமகன், மணமகள் ஆகிய இரு வீட்டாரின் குடும்பத்தினருடன் வீட்டிலோ அல்லது கோயில்களிலோ நடைபெறுகிறது. கோயில்கள், வீடுகளில் எளிமையாக திருமணம் நடைபெறுவதால் மேடை அலங்காரம் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், மேடை அலங்கார தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்கள், பல லட்சம் முதலீடு செய்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

வேலூர்மாவட்டத்தில் 2 ஆயிரம் மேடை அலங்காரத் தொழிலாளர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரம் பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆயிரம் பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் என்று 4 மாவட்டத்திலும் சுமார் 6 ஆயிரம் மேடை அலங்காரத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொழில் முதலீட்டிற்கு வாங்கிய கடன் எப்படி செலுத்துவது
ஊரடங்கு உத்தரவால் கோயில் திருமணம், திருவிழாக்கள் ஆடம்பரம் இன்றி நடத்தப்பட்டு வருவதால் மேடை அலங்காரங்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருமணம், திருவிழாக்கள் என்றாலே மேடை அலங்காரத்தின் முக்கியத்துவம் பெரும் அளவு இருந்து வரும். மேடை அலங்காரம் மூலம் விழாக்கள் மேலும் அழகூட்டப்படுகிறது. கொரோனாவால் இத்தகைய அலங்காரங்கள் செய்ய ஆர்டர்கள் கிடைக்காமல் எங்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. மேடை அலங்கார தொழிலை நம்பி பல லட்சம் முதலீடு செய்துள்ளோம். ஆனால் கடந்த 3 மாதங்களாக எந்த நிகழ்சிகளுக்கும் அலங்காரம் செய்ய முடியாமல் முடங்கியுள்ளோம்.

இதனால் முதலீடு செய்த தொகையும் எடுக்க முடியாமல், பணிபுரியும் தொழிலாளர்களும் வருவாய் இல்லாமல் தவித்து வருகிறோம். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மேடை அலங்கார ெதாழிலில் ஈடுபட்டு வரும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலில் முதலிடு செய்வதற்கு பெற்ற பல லட்சம் கடன் தொகையை எப்படி திரும்ப செலுத்துவது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இந்த நிலை எப்போது மாறுமோ தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

Tags : Thiruvannamalai ,Corona ,Vellore ,districts ,stage decorators , Vellore, Thiruvannamalai, Corona, Stage Decorators, Vulnerability
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...