×

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சிற்ப கலைஞர்கள்

* சுவாமி சிலைகளை வாங்க மக்கள் தயக்கம்
* மூலப்பொருட்கள் கிடைப்பதிலும் சுணக்கம்

நெல்லை: ஊரடங்கு காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடி கிடப்பதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். தென்மாவட்டங்களில் கற்சிலைகள் தயாரிப்பதில் குமரி மாவட்டம் மயிலாடி சிற்ப கலைக்கூடங்கள் புகழ்பெற்றவை. அங்கு கற்சிலைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சுவாமி விக்ரகங்களுக்கான வெள்ளி அங்கிகள், திருவாசி(பிறை), முழு உருவ பித்தளை சிலை, வெள்ளி மற்றும் செம்பு சிலைகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான சிற்ப கலைக்கூடங்கள் நெல்லை டவுன் ஸ்தபதி வளவு, கிருஷ்ணாபுரம், தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் சுரண்டை ஆகிய இடங்களில் உள்ளன. இத்தொழிலை நம்பி சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் கடந்த 3 மாதமாக புதிய ஆர்டர் ஏதுமின்றி சிற்ப கலைஞர்கள் தவிக்கின்றனர்.

கோயில்களில் ஏற்கனவே சிலைகளுக்கு பெறப்பட்ட ஆர்டரை மட்டுமே செய்து வருகின்றனர். அப்பணிகளை முடித்தாலும் யாரும் பணம் கொடுத்து சிலைகளை பெற்று கொள்வதில்ைல. கோயில்கள் அனைத்தும் இன்று வரை பூட்டி கிடப்பதால், பக்தர்கள் அவற்றை வாங்கி கொள்ள வருவதில்லை. கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள சிற்ப கூடங்களில் நிறைவு செய்யப்பட்ட சுவாமி சிலைகள், பீடங்கள், தாமிர கலசங்கள், கோபுர கலசங்கள், மூலஸ்தான கதவுகளுக்கான தகடுகள் என பல பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பக்தர்கள் யாரும் பெற்று கொள்ள முன்வராததால், சிற்ப கலைக்கூடங்களில் அவற்றை அறைகளில் பூட்டி பாதுகாத்து வருகின்றனர். சுடலைமாடன், அம்மன், கருப்பசாமி, முருகன், விநாயகர் என சுவாமி சிலைகளும் தேக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்து கிருஷ்ணாபுரம் சிற்ப கலைக்கூட கலைஞர் மனோகரன் கூறுகையில், ‘‘வருடத்தில் 10 மாதங்கள் மட்டுமே எங்களுக்கு வேலையிருக்கும்.

கார்த்திகை, மார்கழி மாதங் களில் எங்கள் கலைக்கூடங்களில் பணிகள் இருக்காது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால், புதிய சிற்பங்களுக்கான பணிகள் எதுவும் 3 மாதங்களாக கிடைக்கவில்லை. நிறைவு பெற்ற சிலைகள், திருவாசி, அங்கிகளையும் பெற்றுக் கொள்ள கோயில் நிர்வாகத்தினர் வரவில்லை. குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி, மும்பை வரை எங்கள் வேலைப்பாடுகள் நிறைந்த சிலைகள் செல்கின்றன. கொரோனா எங்கள் வாழ்வாதாரத்தை முடக்கி போட்டுவிட்டது. உரிய முதலீடு இன்றி ஒரு லட்சம் வரை தற்போது கடன் பெற்று தொழில் நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, கோயில்களை விரைந்து திறக்க அரசு ஆவன செய்ய வேண்டும்’’ என்றார். இந்நிலையில் சிற்ப கலைஞர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.

பித்தளைக்குரிய தகடுகள், வெங்காரம் என்னும் வேதிப்பொருட்கள், பித்தளை பொடி ஆகியவற்றை மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வர வேண்டியதுள்ளது. இ-பாஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் இப்பொருட்களை அதிக விலை கொடுத்து நெல்லையிலே வாங்க வேண்டிய சூழலில் சிற்ப கலைஞர்கள் உள்ளனர். எனவே மூலப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Artisans ,Thoothukudi district ,Paddy , Paddy, Thoothukudi, Livelihood, Sculptors
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி