×

கையுறை, பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுங்கள்; ரூபாய் நோட்டுகள் மூலம் தான் வணிகர்களுக்கு தொற்று பரவுகிறது: நெல்லை சிறப்பு அதிகாரி அபூர்வா எச்சரிக்கை

நெல்லை: ரூபாய்  நோட்டுகளை அதிகம் கையாளுவதன் மூலம்தான் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று  பரவுகிறது. எனவே கையுறை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வுடன்  செயல்பட வேண்டும் என நெல்லை மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி அபூர்வா தெரிவித்தார். நெல்லை  மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை  மேற்கொள்ள தமிழக உயர்கல்வித்துறை  செயலாளர் அபூர்வா சிறப்பு அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், போலீஸ் அதிகாரிகள், அரசு மருத்துவக்கல்லூரி, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன்  நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நெல்லை மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது. எனினும் இந்த பெருந்தொற்றை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கொரோனா பாதிப்பு, அதிலிருந்து மீண்டவர்கள், மருந்துகள் அளிக்கும் எதிர்ப்பு சக்தி ஆகியவை குறித்து மருத்துவக்கல்லூரி  ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். தொற்று பரவி வரும் இடங்கள் குறித்து வரைபடம் தயாரித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அங்கு யாரும் நுழைய மாட்டார்கள். பணத்தின் மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவுகிறது. இதனால் தான் வியாபாரிகள் பலர் அடுத்தடுத்து பாதிக்கப்படுகின்றனர்.

எனவே வியாபாரிகள் எச்சில் தொட்டு பணம் எண்ணக் கூடாது. கையுறை போன்ற பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு சென்றால் மீதி வாங்கும் சில்லரையை சோப்பு கரைசலில் போட வேண்டும். பணத்தை ஒரு பையில் போட்டு பத்திரமாக வைத்து விட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை கடைபிடித்தால் தொற்று பரவாமல் தடுக்கலாம். நெல்லை மாவட்டத்தை விட நெல்லை மாநகராட்சியில் 44 வார்டுகளில் தொற்று பரவியுள்ளது. இந்த வார்டுகளில் தொற்று பரவலை தடுத்து பாதுகாப்பு வளைய பகுதிகளை குறைத்து 2 வாரங்களில் கொரோனா இல்லாத வார்டுகளாக மாற்ற வேண்டும்.

அதே நேரத்தில் எஞ்சியுள்ள 11 வார்டுகளிலும் கொரோனா தொற்று பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவது தான் நமக்கு பெருமை. எனவே தொற்று கண்டறியப்பட்டால் அடுத்த 2 மணி நேரத்திற்கும் சுகாதார நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா, துணை போலீஸ்  கமிஷனர் சரவணன்,  மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சப் கலெக்டர்கள் நெல்லை  மனீஷ் நாரணவரே,  சேரன்மகாதேவி பிரதீப் தயாள், உதவி கலெக்டர் (பயிற்சி)  சிவகுரு பிரபாகரன், நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன், மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்த்ராச்சலம், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன்  ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராமன் மற்றும் அதிகாரிகள்  கலந்து கொண்டனர். தொடர்ந்து கங்கை கொண்டான் சோதனை சாவடியையும் சிறப்பு அதிகாரி ஆபூர்வா பார்வை யிட்டு ஆய்வு நடத்தினார்.



Tags : traders ,Apurva ,Trader ,Rice , Glove, safety feature, merchant, infection
× RELATED வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம்...