×

கூடலூர் அடுத்த நாடுகாணியில் மனித-வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த கருத்து கேட்பு கூட்டம்

கூடலூர் :  கூடலூரை அடுத்துள்ள தேவாலா வாளவயல், பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர். முதுமலையில் இருந்து கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கைகள் எடுத்த போதும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று பந்தலூர், நாடுகாணி வனச்சரகம் மற்றும் சேரம்பாடி வன பாதுகாப்பு படை சார்பில் மனித வனவிலங்கு மோதல்களை தடுக்கவும் காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் அனைத்து தரப்பினரின் கருத்து கேட்பு கூட்டம் நாடுகாணி தாவரவியல் பூங்கா வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், இப்பகுதிகளில் குறிப்பிட்ட சில காலங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கான காரணங்கள் குறித்தும், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், யானை உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களின் உயிர் உடமைகள் மற்றும் விவசாய பயிர்களை பாதுகாப்பது குறித்தும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மனித வனவிலங்கு மோதல் தொடர்பான கருத்துக்கள் அனைத்தும் மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றும், கடந்த சில நாட்களில் 2 காட்டு யானைகளால் தொழிலாளர் குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்ட  பாண்டியாறு சரகம் 4 தொழிலாளர் குடியிருப்புகளை சுற்றிலும் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார கம்பி வேலிகள் அமைக்கும் பணியினை தொடங்க உள்ளதாகவும், யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் எழுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் வனத்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டது.கூட்டத்தில் பந்தலூர், நாடு காணி மற்றும் வனத்துறை பறக்கும் படை வனச்சரகர்கள் கலைவேந்தன், பிரசாத், கணேசன், தேவாலா இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், டான் டீ மேலாளர் ஸ்ரீதர், அரசு தேயிலைத் தோட்ட அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், விவசாயிகள், வனவிலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்….

The post கூடலூர் அடுத்த நாடுகாணியில் மனித-வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Kudalur ,Dewala Valavyal ,Pandiar ,
× RELATED கூடலூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்..!!