×

நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் சரிவு: மதுரை குடிநீர் விநியோகத்திற்கு சிக்கல்

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக சரிந்துள்ளது. இதனால் மதுரை மாநகரின் குடிநீர் விநியோகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இங்கு தேக்கப்படும் தண்ணீர் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. மூலவைகையாறு உள்ளிட்ட அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதமாக போதிய மழை இல்லாததால், வைகை அணைக்கு நீர்வரத்து நின்று விட்டது.

இந்நிலையில், சேடப்பட்டி - ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், தேனி மற்றும் பெரியகுளம் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் மதுரை மாவட்ட குடிநீருக்காக தினசரி 72 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில், தற்போது நீர்மட்டம் 34.88 அடியாக குறைந்துள்ளது. இதில், 15 முதல் 20 அடி உயரத்திற்கு வண்டல் மண் படிந்துள்ளதால், குறைந்த அளவு தண்ணீரே இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழையும் சரியாக பெய்யவில்லை. வைகை அணைக்கு கைகொடுக்கும் முல்லைப்பெரியாறு அணையிலும் போதுமான நீர் இருப்பு இல்லை. நீர்வரத்து இல்லாமல், வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால், மதுரை மாநகர குடிநீர் விநியோகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : water level collapse ,Madurai ,Vaigai Dam , Rainfall in the catchment, the Vaigai Dam, the water level decline
× RELATED நீர்மட்டம் 56 அடியாக குறைந்ததால் வைகை...