×

‘நீங்க மூடுங்க... மூடாட்டி போங்க...’ எங்களுக்கு ‘எல்லையே’ கிடையாது...எல்லா ஏரியாவிலும் சரக்கடிப்போம்: எல்லை தாண்டும் மதுரை மதுப்பிரியர்கள்

திருப்புவனம்: முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுரையில் உள்ள மதுப்பிரியர்கள், திருப்புவனம் பகுதி டாஸ்மாக் கடைகளில் குவிகின்றனர். இதனால் கொரோனா சமூக பரவலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் அண்டை மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்க குவிந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் பகுதியில் கலியாந்தூர், வன்னிக்கோட்டை, பழையனூர். திருப்பாச்சேத்தி, புலியூர் உள்பட 7 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இவற்றில் வேலாங்குளம், பழையனூர், திருப்பாச்சேத்தி ஆகிய 3 கடைகள் தவிர மற்ற 4 கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக புலியூர் கடை மதுரைக்கு மிக அருகில் இருந்ததால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சரக்கு வாங்க குவிந்து விட்டனர். இதனால் புலியூர் கடை உடனடியாக மூடப்பட்டது. ஆனாலும் மதுரை ‘மதுப்பிரியர்கள்’ விடாமல் திருப்புவனம் அருகே வேலாங்குளம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை தேடி வந்து குவிகின்றனர். நேற்று மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குவிந்து விட்டனர். இதில் லோக்கல் ‘குடிமகன்கள்’ தனி.

சமூக இடைவெளியின்றி இக்கடையில் குவிவதாலும், கொரோனா தொற்று அதிகமாக பரவும் மதுரையில் இருந்து ஏராளமானோர் வருவதாலும், கொரோனா சமூகப்பரவல் ஆகிவிடும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட எல்லையில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலங்காநல்லூரிலும் அள்ளுது கூட்டம்
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டத்தில் மாநகர் பகுதிகள், மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியம், பரவை பேரூராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு இல்லாத டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளிலும், மதுப்பிரியர்கள் குவிந்து வருகின்றனர். இதை பயன்படுத்தி கொண்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள், ஒரு மது பாட்டிலுக்கு சராசரியாக ரூ.50 முதல் 70 வரை விலை உயர்த்தி விற்றனர்.

அரசு நிர்ணயித்த விலையை விட டாஸ்மாக் பணியாளர்கள் தன்னிச்சையாக பல மடங்கு விலையை உயர்த்தி உள்ளதாக குடிமகன்கள் தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு நேரத்தில் சமூக இடைவெளியின்றி முகக்கவசம். அணியாமல், குடிமகன்கள் கூட்டம் அலங்காநல்லூரில் திரண்டதால் போக்குவரத்து நெருக்கடியும் உள்ளது. பல்வேறு சோதனைச்சாவடிகள் இருந்தும், அவற்றை மீறி அலங்காநல்லூர்  பகுதிக்குள் வந்தவர்களால், கொரோனா நோய் தொற்று உருவாகும் அபாயத்தை காவல்துறை உருவாக்கி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Tags : areas ,border ,Madurai Madurai , Border, Madurai, Madurai
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது