×

சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றில் பாலம் அமைக்க மண் பரிசோதனை: விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

வேலூர்: சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றில் பாலம் அமைக்க மண் பரிசோதனை நேற்று எடுக்கப்பட்டது. விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், நீதிமன்றம் போன்ற  முக்கிய அலுவலகங்கள் உள்ளன. அதேபோல் காட்பாடியில் விஐடி, ரயில் நிலையம், அரசு பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் 8 கி.மீ சுற்றி செல்ல வேண்டும். எனவே, சத்துவாச்சாரி, காங்கேயநல்லூர் இடையில் பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் காங்கேயநல்லூர் முதல் சத்துவாச்சாரி வரை தரைப்பாலம் அமைக்க கடந்த 2011ம் ஆண்டு அன்று நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ₹7.50 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு, அடிக்கல் நாட்டும் விழாவும் காங்கேயநல்லூரில் நடந்தது. பின்பு இந்த தரைப்பாலம் அமைக்கும் முடிவு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி திட்ட அறிக்கை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சத்துவாச்சாரி-காங்கேயநல்லூர் இடையே அமைய உள்ள பாலம், சத்துவாச்சாரியில் ரங்காபுரம் முதல் காட்பாடி பிரம்மபுரத்தில் முடியும் வகையில் அமைக்கப்படுகிறது.

இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலாற்றில் பாலம் அமைக்க மண்மாதிரி நவீன் இயந்திரங்கள் கொண்டு சேகரிக்கப்பட்டது, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த பாலம் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 6 வழிச்சாலையாக, 5 மீட்டர் உயரத்தில் கட்டப்பட உள்ளது. இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சத்துவாச்சாரி முதல் பிரம்மபுரம் வரையில் பாலாற்றுக்கு இடையே பாலம் அமைக்க மண் மாதிரி எடுக்கப்பட்டது. அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும். பின்னர் பாலம் அமைப்பதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

Tags : Bridge ,Soil Testing , SATAVACHARI - Brahmapuram, Bridge, Soil Testing
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!