×

விலை வீழ்ச்சி, வியாபாரிகள் வராததால் 6 டன் சம்பங்கி பூக்களை கீழே கொட்டிய விவசாயிகள்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், சம்பங்கி பூ விலை வீழ்ச்சி மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்க வராததால், 6 டன் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம்,  பெரியகுளம், புளியங்கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கர்  பரப்பளவில் சம்பங்கி பூ பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்கள்  சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு  வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு  விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்  காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூ மார்க்கெட் செயல்படாத  காரணத்தினால் பூக்கள் பறிக்கப்படாமல் செடியில் பூத்து வீணாகின. இந்நிலையில்  ஜூன் மாதம் தொடக்கம் முதல் மீண்டும் பூ மார்க்கெட் செயல்பட  தொடங்கியதையடுத்து மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால்  பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் சம்பங்கி பூ கிலோ  ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையான நிலையில்,

தற்போது  வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படாததால் நேற்று கிலோ  ரூ.10க்கு விற்பனையானது. ஆனால் பறிக்கப்பட்ட சம்பங்கி பூக்களை வாங்க  வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நேற்று பூ மார்க்கெட்டுக்கு சம்பங்கி  பூக்கள் கொண்டு வந்த விவசாயிகள் சுமார் 6 டன் பூக்களை திருப்பி  எடுத்துச்சென்று கீழே கொட்டி விட்டு சென்றனர். சம்பங்கி பூக்கள் விலை  போகாததால் சம்பங்கி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags : merchants , Prices fall, merchants, sambangi flowers, farmers
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...