×

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: ம.நீ.ம தலைவர் கமல் கண்டனம்..வணிகரின் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே வேளையில் உயிரிழந்த வணிகரின் குடும்பத்திற்கு நடிகர்  ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரஜினிகாந்த் ஆறுதல்

இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார். ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார் என்ற தகவலை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கமல் கண்டனம்

இதுதொடர்பாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட செய்தி குறிப்பில், சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது. இரத்தம் சொட்ட சொட்ட இருவரைத் தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம். அதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத் தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்துவிட்டு இந்த கொலைகளை முதல்வர், கடந்துவிடக்கூடாது.

நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கொலையை செய்தவர்கள், அதற்குத் துணை நின்றவர்கள், கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இதை மறைக்க முயன்றவர்கள் என பலருக்கு இந்த கொலையில் பங்குண்டு. இரண்டு அப்பாவிகளின் குருதி படிந்த காவல்துறையைச் சுத்தம் செய்ய அரசு என்ன செய்ய போகிறது? இவை அனைத்திற்கும் மேலாக காவல்துறையின் கொலைகளை, கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும், அந்த காவல்துறையை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும் இதில் முதல் குற்றவாளிகள். எத்தனை முறை நாம் எதிர்த்தாலும், தன் விருப்பத்திற்குச் செயல்பட்டு, தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தொடர்ந்து மக்களின் உயிருடனும், உணர்வுகளுடனும் விளையாடும் இந்த அடிமை அரசின் ஆணவத்தை, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்கும் நம் குரல் அசைத்துப் பார்க்கட்டும். எந்த தவறும் செய்யாமல் கொலையான இரண்டு அப்பாவிகளின் உயிர் போல், இனி எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படாதிருக்க இதைச் செய்ய வேண்டியது நம் கடமையாகும், என்று தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikanth ,Sathankulam , Saathankulam, Police Station, Jayaraj, Fennix, Kamal, Rajinikanth
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...