×

கிளைச் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்...! காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்; டிஐஜி உத்தரவு

கோவில்பட்டி : கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே உதவி ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Sridhar Suspend ,DIG ,jail ,Father and Son , Branch Prison, Father, Son, Police Inspector, Sridhar, Suspend
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி