×

சாத்தான்குளம் சம்பவம் குறித்து அவதூறு கருத்து பதிவு; சென்னை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம்...மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை

சென்னை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து பதிவிட்ட ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, தூத்துக்குடி  மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 19ம் தேதி இரவில் போலீசார் காவல் நிலையத்துக்கு விசாரணை கைதிகாளாக அழைத்து சென்றனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்  அவர்கள்  இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22ம் தேதி இரவில் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, யேய் தம்பிளா வாங்க அடுத்த லாக்கப் டெத் ஆள்கிடைக்கலன்னு பார்த்தோம். ஆள் கிடைச்சிருச்சி. உங்களுக்கு ஆசனவாய் இருக்குதா தம்பிகளா என்று ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, பல்வேறு எதிர்ப்புகளையடுத்து அன்பு உறவுகளே!! மேற்கண்ட பதிவு உங்களது மனதை புண்படுத்தியது என்ற மனவருத்தத்துடன் பதிவிடுகிறேன். மேற்கண்ட இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாத்தான்குளத்தில் நடந்த நிகழ்வை வைத்து, காவல்துறைக்கு மேலும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக ,என்னுடைய ஃபேஸ்புக் ஐடியை உபயோகித்து யாரோ வேண்டுமென்றே, மேற்கண்ட பதிவினை பதிவிட்டுள்ளார்கள. ஆகையால் அனைவரும் என்னை தங்கள் சகோதரனாக நினைத்து மன்னிக்க வேண்டுகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக  சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் நிகழ்வை பற்றி ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

அப்பதிவானது காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது குறித்து அவரை விசாரித்ததில் தனது முகநூல் கணக்கு மற்றும் அதன் இரகசிய குறியீடு(Password) ஆகியவற்றை தனது நண்பர்களிடம் பகிர்ந்திருந்ததாகவும், தனக்கு தெரியாமல் யாரோ அப்பதிவினை பதிவிட்டதாக கூறினார். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு, காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்திய காரணத்திற்காக காவலர் சதீஸ் முத்து அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று  தெரிவித்தார்.


Tags : incident ,Mathrubhumi English ,Satish Muthu ,commissioner ,Mathrubhumi - Municipal , Report on slanderous incident; Mathrubhumi - Municipal commissioner AK Wiswaranathan steps out
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...