×

தென்காசியில் நிகழ்ந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு விவகாரம்: 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!

தென்காசி: தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 2 பேர் மீதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள வீரகேரளம்புதூர் காவல்நிலையத்தில் விசாரணையின் போது ஆட்டோ ஓட்டுநர் குமரேசனை போலீசார் தாக்கியதாக, காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் குமரேசனின் தந்தை நவநீதகிருஷ்ணன் ஏற்கனவே புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த குமரேசன் ஜூன் 12ம் தேதி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் குமரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் குமரேசனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பேருந்து நிலையம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், காவல் துறை உயர் அதிகாரிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பாக, 2 எஸ்.ஐ. காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சந்தேக அடிப்படையில் இயற்கைக்கு மாறாக மரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.



Tags : guards ,Tenkasi ,Auto Driver Deaths , Auto driver deaths in Tenkasi: 2 guards lodged!
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...