சித்தூர் கிராமத்தில் ஏரியில் சட்ட விரோத பைப்லைன்:அகற்றாத அதிகாரிகள்,..பொதுமக்கள் அதிருப்தி

செய்யூர்:  செய்யூர் அருகே ஏரிக்குள் சட்டவிரோதமாக தனியார் சிலர், பைப் லைன் அமைத்து ஏரியை சேதப்படுத்தியுள்ளனர். இதனை அகற்றாமல், அதிகாரிகள் மெத்தமாக உள்ளன. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சித்தாமூர் ஒன்றியம் மாம்ப்பாக்கம் ஊராட்சி சித்தூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியின் அருகில், குமுளி கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்தனர்.மேலும், கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, இரவோடு இரவாக ஏரியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நீண்டதூரத்துக்கு பள்ளம் தோண்டி,  ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்துக்கு, அவர்களது கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல பைப்புகளை புதைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள்  வருவாய்த் துறை அதிகாரிகள், போலீசாரிடம் புகார் அளித்தனர்.  அதன்பேரின் கடந்த 24ம் தேதி அப்பகுதிக்கு நேரில்  சென்று ஆய்வு செய்த வருவாய்த் துறையினர், அந்த பணியை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்தனர். இந்நிலையில் பணி நிறுத்தப்பட்டு 3 நாட்களாகியும் புதைக்கப்பட்ட  பைப் லைன்கள் இதுவரை அகற்றாமல் உள்ளது.  அதனால் மீண்டும் நில ஆக்கிரமிப்பு பணி தொடருமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதையொட்டி, பைப்லைன்களை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

Related Stories:

>