×

கொரோனா தொற்று பரவலால் திருப்போரூர் காவல் நிலையத்துக்குள் செல்ல கடும் கட்டுப்பாடுகள்

திருப்போரூர்:  திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெற்கு மாடவீதியில், திருப்போரூர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்ஐக்கள், 10 போலீசார் பணிபுரிகின்றனர். மேலும், சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படையினர், மகளிர் போலீசார் ஆகியோரும் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். திருப்போரூர் ஓஎம்ஆர் சாலை, திருப்போரூர் - கூடுவாஞ்சேரி சாலை, திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை ஆகிய இடங்களில், இவர்கள் பாதுகாப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். தற்போது திருப்போரூர், ஆலத்தூர், வெங்கூர், கொட்டமேடு ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறந்துள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும் மது பானங்களை வாங்குவதற்காக பலரும் பைக், ஆட்டோ ஆகிய வாகனங்களில் வருகின்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்து ஊரடங்கு விதிமீறல் வழக்குப்பதிவு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருப்போரூர் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள தெருவில் 2 பேருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், திருப்போரூர் பேரூராட்சியில் இதுவரை 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிைலயில், சென்னையில் உள்ள காவலர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, இன்ஸ்பெக்டர் ஒருவர் இறந்ததால், 2 காவல் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால், பயந்து போன செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை, தேவையில்லாத நபர்களை காவல் நிலையத்தில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து காவல் நிலையத்தில் யாரும் நுழைய முடியாத அளவிற்கு சவுக்கு கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. வாகன பறிமுதல் செய்யப்பட்டவர்கள் வெளியில் இருந்தபடியே, தங்களது ஆவணங்களை காண்பித்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வருபவர்கள் கூட்டமாக வருவதை தவிர்த்து, ஒருவர் மட்டுமே வர வேண்டும். செல்போன் மூலம் தெரிவித்தாலே போதுமானது எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : police station ,spread ,Tiruppore , Corona, Tirupporeur, Police Station
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...