×

துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியானது. இதனால், சக ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.
திருப்போரூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 5 மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேலாளர், காசாளர், பொறியாளர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 27 ஊராட்சிகளில் கொரோனா தொற்று பரவியுள்ளது.  இந்நிலையில் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் ஒருவர், சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். இவர் கடந்த 3 மாதங்களாக நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், கடந்த 24ம் தேதி பரிசோதனை மேற்கொண்டார். நேற்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியான தகவல் வெளியானதையடுத்து, ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேறினர். இதையடுத்து, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. இதனால், அவருடன் தொடர்பில் இருந்த ஊராட்சி செயலர்கள், சக அலுவலர்கள், ஊழியர்கள் இதனால் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் பரமசிவன் நகரை சேர்ந்த 50 வயது நபர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு இருமல், காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர், கடந்த 25ம் தேதி கொரொனா பரிசோதனை செய்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரிந்தது. இதையடுத்து அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேபோல், திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம்  சாலை சேர்ந்த 68 வயது தந்தை, 45 வயதுடைய மகனுக்கு நேற்று கொரொனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாற்றுபணியால் தொற்று?
கடந்த சில நாட்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் பலர் தாம்பரம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், புனித தோமையர்மலை, கன்டோன்மென்ட் ஆகிய கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் சர்வே பணிக்கு,மாற்றுப்பணி என்ற முறையில் மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கிருந்து அதிகாரிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் கூறப்படுகிறது.

5 ஆயிரத்தை நெருங்கியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றில் 75பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 4911 பேருக்கு உறுதியாகியுள்ளது. 2589 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 75 பேர் நோய்தொற்றால் சிகிச்சை பலனின்றி இருந்துள்ளனர்.

Tags : Corona ,Deputy Regional Development Officer , Deputy Area Development Officer, Corona
× RELATED கொரோனா தொற்றுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு