×

டாஸ்மாக் பாரில் 10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்: ஊழியர்களே விற்றது அம்பலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில், கூடுதல் விலைக்கு விற்று பணம் பார்க்க வைத்திருந்த ₹10 லட்சம் மதிப்பிலான 4431 குவார்ட்டர் மதுபாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மதுபானங்களை கடை ஊழியர்களே பார் உரிமையாளருக்கு விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகரம் மற்றும் ஒன்றியத்தில் கடுமையான ஊரடங்கு அமுலில் உள்ளது. இதனால் கடந்த 19 முதல் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருவள்ளூர் நகரம் மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட டாஸ்மாக் மது கடைகளும் 19ம் தேதி முதல் மூடப்பட்டன.

இதை சாதகமாக பயன்படுத்தி, பார் உரிமையாளர்கள் பலர் கூடுதல் விலைக்கு சரக்குகளை விற்று பணம் பார்க்கும் வகையில், மது வகைகளை பெட்டி பெட்டியாக வாங்கி பார்களில் குவித்தனர். தொடர்ந்து, குவார்ட்டர் ₹500 வரை கள்ளச்சந்தையில் விற்று வந்தனர். மதுபான பிரியர்களும் வேறு வழியின்றி போதைக்காக வாங்கி குடித்தனர். இதுகுறித்து உள்ளூர் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதில் அதிருப்தி அடைந்த மதுபான பிரியர்கள், சரக்குகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பது குறித்து, மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கள்ளச்சந்தையில் மது விற்பவர்களை பிடிக்க பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் நேற்று வேப்பம்பட்டு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள பார் பகுதியில் சிலர் சுற்றி வந்ததை தொடர்ந்து, பாரை திறந்து சோதனை நடத்தினர்.

அப்போது தனி அறையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் மொத்தம் 4431 குவார்ட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ₹10 லட்சம். விசாரணையில், பார் உரிமையாளர் வேப்பம்பட்டு தாணு என்பதும், கடந்த இரு நாட்களுக்கு முன்பு வரை கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வந்ததும், தற்போது தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் டாஸ்மாக் கடை ஊழியர்களே பார் உரிமையாளருக்கு மதுபானங்களை விற்றது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்டுகொள்ளாத போலீசார்
திருவள்ளூர் டவுன், திருவள்ளூர் தாலுகா, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு ஆகிய காவல் நிலைய பகுதிகளில் உள்ளூர் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரின் நல்லாதரவோடு ஆங்காங்கே கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. இதை கண்டும் காணாமல் இருக்க மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்கி விடுகின்றனர். இதனால் தகவல் தெரிவித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என மக்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே சிக்கியவர்
வேப்பம்பட்டு பார் உரிமையாளரான தாணு, காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகிலும் பார் வைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கின்போது, காக்களூர் அருகே வாகன சோதனையில், இவரது ஜீப்பில் இருந்து, 400 குவார்ட்டர், 120 பீர் பாட்டில்களையும், ₹4 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். ஜீப்பையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மீண்டும் அவரது வேப்பம்பட்டு பாரில் ₹10 லட்சம் சரக்குகள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.



Tags : Tasks Bar, Brewery Brewers, Staff
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...