வழிப்பறி கொள்ளையன் குண்டாசில் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த வாலிபரை கைது செய்து போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அடுத்த மப்பேடு சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் (எ) தமிழரசன் (28). இவர் திருவள்ளூர் மற்றும் மப்பேடு சுற்றுப்புற பகுதிகளில், தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் மப்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழரசன் மீது ஏற்கனவே வழிப்பறி குறித்து 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

இதையடுத்து தமிழரசனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, எஸ்.பி. அரவிந்தன் பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழரசனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார். உத்தரவு நகலை புழல் சிறை கண்காணிப்பாளரிடம் இன்ஸ்பெக்டர் கண்ணையன் ஒப்படைத்தார். இதனையடுத்து, தமிழரசனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>