×

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் மூச்சுத்திணறி குழந்தை சாவு:உறவினர்கள் வாக்குவாதம்,..திருநின்றவூரில் பரபரப்பு

திருநின்றவூர்: ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால்  மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனை கண்டித்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஆவடி அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி.  கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியான முனியம்மாளுக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் முனியம்மாளை புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், பிறந்த சில நிமிடங்களில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  இதனையடுத்து, அங்கிருந்த டாக்டர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுரை கூறினர். இதனையடுத்து, அங்கிருந்து உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவசர ஆபத்தை உணராமல் 3 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்தது.
அதன்பிறகு, தாயுடன் குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு ஊழியர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் உறவினர்கள் குழந்தை இறந்ததற்கு ஆம்புலன்சின் கால தாமதமே காரணம் என குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எப்போதுமே அலட்சியம்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போது ஊரடங்கால், அவசர தேவைக்கு ஆம்புலன்சை அழைத்தால் அவர்கள் உடனடியாக வருவதில்லை. இதனால் பல உயிர் பலி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்  அவசர மருத்துவ தேவைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.



Tags : relatives ,Baby , Ambulance, suffocation, baby death, Thiruninvur,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…