×

அரியானா, டெல்லி, உபி.க்குள் படையெடுப்பு 3 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல்

புதுடெல்லி: அரியானா, டெல்லி, உத்தர பிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளி படை ஒரே நேரத்தில் நுழைந்து தாக்க தொடங்கியுள்ளது. கடந்த 3 மாதங்களாக கொரோனா காரணமாக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆப்பிரிக்க வெட்டுக்கிளி படைகள் தாக்கி வருகின்றன. இதனால் விவசாயிகளின் விளைநிலங்கள் நாசமடைந்து வருகின்றது. ஏற்கனவே, பாகிஸ்தான் வழியாக ராஜஸ்தானில் நுழைந்த வெட்டுக்கிளிகள், அங்கிருந்து அரியானா மாநிலத்துக்குள் நேற்று முன்தினம் மாலை நுழைந்தன. விவசாய நிலங்களை பாழாக்கின. இவை நேற்று காலை குர்கான் மாவட்டத்திற்குள் நுழைந்தன. மரங்கள், செடிகள், என எங்கு பார்த்தாலும் வெட்டுக்கிளிகளாக காட்சியளித்தன. மேலும், வீடுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினார்கள்.

அரியானாவில் நுழைந்த வெட்டுக்கிளி படைகள் சிறிது நேரத்தில் தலைநகர் டெல்லியிலும் நுழைந்தன. அங்குள்ள கட்டிடங்கள், விமான நிலையம், வீடுகள், மரங்கள் போன்றவற்றில் அவை அமர்ந்துள்ளன. அதேபோல், நேற்று மாலை உத்தரப் பிரதேச மாநிலத்துக்குள்ளும் இவை புகுந்தன. இந்த 3 மாநிலங்களிலும் பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கி வருகின்றன. இதனால், அவற்றை விரட்டுவது, அழிப்பது பற்றி உபி. டெல்லி, அரியானா ஆகிய 3  மாநில அரசுகளும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த வெட்டுக்கிளி கூட்டத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

ராஜஸ்தான் குழு அழைப்பு
மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜஸ்தான், அரியானா, உத்தரப்பிரதேசத்தில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் பணிக்காக, ராஜஸ்தானில் இருந்து ஏற்கனவே அனுபவம் பெற்ற குழுக்கள் அழைக்கப்பட்டுள்ளன. 26ம் தேதி காலை ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. அவற்றை இந்த  குழுவினர் கட்டுப்படுத்தினர்,’ என்று கூறப்பட்டுள்ளது.

35 ஆயிரம் மக்கள் உணவை சாப்பிடும்
வெட்டுக்கிளிகள் தனது உடல் எடையை காட்டிலும் அதிகமாக உட்கொள்ளும் திறன் கொண்டது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வெட்டுக்கிளிகள் படையில்  4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். இவை, 35 ஆயிரம் பேர் உண்ணும் உணவை காட்டிலும் அதிகமாக உணவை உட்கொள்ளும்.

5 கிமீ நீளம், 2 கிமீ அகலம்
அரியானாவில் வெட்டுக்கிளிகள் படை நுழைந்தபோது, பல இடங்களில் கரும் மேகம்தான் படர்கிறதோ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு வெட்டுக்கிளிகள் காட்சியளித்தன. இந்த வெட்டுக்கிளிகள் படை, 5 கி.மீ. நீளமும், 2 கி.மீ. அகலமும் கொண்டதாக இருந்தது.

இரவோடு இரவாக போட்டு தள்ளுங்கள்
பகலில் பயிர்களை வேட்டையாடிய பிறகு, இரவு நேரங்களில் வெட்டுக்கிளிகள் பறக்காமல் ஓரிடத்திலேயே தங்கியிருக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, இரவு நேரங்களில் பூச்சிக் கொல்லிகளை அடிக்க ஏற்பாடு செய்யும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பகலில் மட்டும்தான் அட்டாக்
வெட்டுக்கிளிகள் பகல் நேரத்தில் மட்டுமே பயிர்களை நாசம் செய்தல், ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன. ஆனால், மாலை பொழுதாகி இருள் சூழ தொடங்கியவுடன் மரங்கள் மற்றும் வீடுகள், பயிர்களில் அப்படியே தங்கி விடுகின்றன. பொழுது விடிந்தவுடன் மீண்டும் தனது வேலையை காட்டத் தொடங்குகின்றன.

35% அழிப்பு
அரியானாவில் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கும் பணி நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் தொடர்ந்தது. 15 தீயணைப்பு துறை வாகனங்கள், டிராக்டர்கள் என பல வாகனங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதில், 35 சதவீத வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டன. மீதமுள்ள வெட்டுக்கிளிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதெல்லாம் தான் அலர்ஜி
* அதிக சத்தம் தரும் ஒலிகளை எழுப்பும் மேளங்களை அடிக்க வேண்டும். l அதிக சத்தத்தில் இசையை ஒலிக்க செய்ய வேண்டும். l அதிக சத்தங்கள் தரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
* வேப்பிலையை எரித்து புகையை உருவாக்க வேண்டும்.

Tags : states ,Haryana ,UP ,Delhi , Haryana, Delhi, UP, 3 states, Locusts
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...