×

கொரோனாவால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இறந்தவரின் உடலை வழங்குவதில் தாமதம் கூடாது: கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: கொரோனா அறிகுறி இருப்பது போன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது உடலை வழங்குவதில் தாமதம் கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு உயிரிழப்பவர்களின் உடலை எந்தவித காலதாமதமும் செய்யாமல், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்றி உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியது. அதன்படி, மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடல் உள்ளாட்சி அமைப்புகள் விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்படுகிறது.

மேலும், கொரோனா அறிகுறி இருப்பது போன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவருக்கு பரிசோதனை செய்த பிறகு, அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால், உடலை அடக்கம் செய்வதில் காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இறந்தவரின் உடலை வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின், ரிசல்ட் வரும் வரை அவரது உடலை வைத்திருக்க கூடாது. இறந்தவரின் உடலை உறவினர்களிடம் வழங்கிட வேண்டும். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி இறந்தவரின் உடலை கையாள வேண்டும். இறந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : deceased ,Health Secretary ,collectors ,body coroner ,death , Corona, casualty, secretary of health
× RELATED வெப்ப அலை: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்