×

போலீசார் தாக்கியதால் வாலிபர் தற்கொலை: உறவினர்கள் போராட்டத்தால் எட்டயபுரத்தில் பரபரப்பு

எட்டயபுரம்: எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மேலத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கணேசமூர்த்தி (29). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 20ம் தேதி பைக்கில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் அவ்வழியாக சென்ற சிஐ4 போலீசார் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த கணேசமூர்த்தியை பெற்றோர் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கணேசமூர்த்தி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அவரது மனைவி, போலீஸ் அடித்ததால்தான் எனது கணவர் தூக்கில் தொங்கினார். அவர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறினார்.தகவலறிந்து எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் சமுதாய தலைவர்கள் குவிய துவங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். அமைச்சர் கடம்பூர் ராஜூவும், செல்போன் மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து ரொக்கமாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் 15 நாளில் கணேசமூர்த்தியின் மனைவிக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்யப்படுமென அமைச்சர் உறுதியளித்தார். சம்பந்தப்பட்ட போலீசாரை பணியிட மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கணேசமூர்த்தி உடலை பெற்றுக் கொண்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Tags : Relatives ,Relatives struggle Youth ,police attack , Cops, youth suicides, relatives struggle, Ettayapuram
× RELATED சாத்தான்குளம் மகேந்திரன் மரணம்...