கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அறிவுறுத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காசிபேட்டையை சேர்ந்தவர் ரத்தினம். தமிழக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மேஸ்திரியாக பணியாற்றி வந்த இவர், கடந்த 1975ம் ஆண்டு பணிக்காலத்தில் மரணமடைந்தார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது கணவரின் பணியை கருணை அடிப்படையில் மகனுக்கு வழங்க கோரி ரத்தினத்தின் மனைவி 1998ல் அரசுக்கு மனு அனுப்பினார்.மனுவை பரிசீலித்த பொது சுகாதாரத்துறை, ரத்தினத்தின் மகன் முருகனுக்கு கடந்த 2006ல் மஸ்தூர் பணி வழங்கியது. அவர் பூந்தமல்லி பொது சுகாதார துறை மையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2015 ஜூன் மாதம் முருகனை பணி நீக்கம் செய்து பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கருணை அடிப்படையில் பணி வழங்க கால அளவு உள்ளது. 3 ஆண்டுகளுக்குள் பணி வழங்கப்பட வேண்டும். ஆனால், மனுதாரருக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, விதிமுறைகளுக்கு முரணாக அவருக்கு பணி வழங்கப்பட்டது சட்டவிரோதம். அவரை பணி நீக்கம் செய்தது செல்லும். கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.இந்த வழக்கில் விதிமுறையை பின்பற்றாமல் மனுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய அதிகாரி மீது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>