×

இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு மருந்து பெயரில் 8 லட்சம் போதை மாத்திரை கடத்தல்: டெலிவரி எடுக்க வந்த வாலிபர் சிக்கினார்

சென்னை:  வெளிநாட்டிலிருந்து சரக்கு விமானத்தில் சென்னை வந்த பார்சலில் மருந்து பொருட்கள் என்ற பெயரில் கடத்தி வரப்பட்ட 8 லட்சம் மதிப்புள்ள  போதை மாத்திரைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். இங்கிலாந்தில் இருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம்  இரவு வந்தது.  அதில் வந்த கூரியர் பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில் ஒரு பார்சல் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் முகவரிக்கு  வந்திருந்தது. அந்த பார்சலில் மருந்து பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகாரிகளுக்கு அந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில தினங்களில் இதேபோல் மருந்து பொருட்கள் என்று வந்த 2 பார்சல்களில் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து சுங்கத்துறையினர் இந்த பார்சலையும் சந்தேகத்தில் திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதில் 270 மாத்திரைகள் இருந்தன. அதை ஆய்வு செய்தபோது, வெளிநாடுகளில் பயன்படுத்தும் விலை உயர்ந்த மெத்தாம் பெட்டமைன் என்ற ஒருவகை போதை மாத்திரைகள் என்பது தெரியவந்தது.

 இதன் சர்வதேச மதிப்பு 8 லட்சம். பின்னர், போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், திருவள்ளூர் முகவரி, அதில் உள்ள செல்போன் எண்கள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. இந்நிலையில்  நேற்று மதியம் அந்த பார்சலை டெலிவரி எடுக்க வந்த சுமார் 25 வயது வாலிபர் ஒருவரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர். கொரோனா ஊரடங்கில் சென்னை விமான நிலையத்தில் மருந்து பொருட்கள் என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் போதை மாத்திரைகள் பிடிபடுவது கடந்த 20 நாட்களில் இது 3வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : UK ,Chennai ,drug trafficking narcotic pill , UK, Madras. Drug Trafficking, Delivery
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...