×

லோக்சபா டிவி, ராஜ்யசபா டிவி ஒருங்கிணைப்பு பார்லி. டிவி.க்கு வருகிறது கிடுக்கிப்பிடி: செலவு குறைப்பு; நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

புதுடெல்லி: லோக்சபா டிவி, ராஜ்யசபா டிவியை ஒருங்கிணைத்த சன்சாத் டிவி.யிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. செலவு கட்டுப்படுத்துவது, நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடர்பான சீரமைப்பது போன்ற நடவடிக்கைளுக்கு ஒருங்கிணைக்க உயர் குழு பரிந்துரைத்துள்ளது. லோக்சபா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கடந்த 2006ம் ஆண்டு  தனி  டிவி ஆரம்பிக்கப்பட்டது. இதுபோல, ராஜ்யசபா டிவி 2011ல் துவக்கப்பட்டது. இந்த  இரண்டு டிவிக்களும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. இப்படி தனித்தனியாக இயங்குவதால் தனி கட்டிட  வாடகை, தனி பணியாளர்கள், கூடுதல் செலவுகள் ஏற்படுவதாக நாடாளுமன்ற நிர்வாகம் கருதியது.

 இதை ஒருங்கிணைத்து செயல்பட வைக்க கடந்த நவம்பர் மாதம் ராஜ்யசபா தலைவர் வெங்கைய நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசித்து, இதுதொடர்பாக பரிந்துரைக்க தனிக்குழு அமைத்தனர். டிவிக்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் பிரசார் பாரதி அமைப்பின் முன்னாள் தலைவர் சூர்ய பிரகாஷ் தலைமையில் குழு  அமைக்கப்பட்டது. இந்த உயர் குழு  பரிசீலித்து, இந்தி, ஆங்கிலத்தில் இந்த இரு சேனல்களும் ஒளிபரப்புவதை சீரமைக்க, செலவுகளை குறைக்க தனி குடையின் கீழ் கொண்டு வரலாம் என்று கூறி சில பரிந்துரைகளை அளித்துள்ளது.
 
பரிந்துரைகள் வருமாறு:
* இரண்டு சேனல்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்கலாம்.  
* லோக்சபா சேனல், ராஜ்யசபா சேனல் இரண்டையும் சன்சாத் டிவி.யின் கீழ் கொண்டு வரலாம்.
*  நீண்ட நேரம் விவாதம் நடக்கும் போது, பார்லிமென்ட் அலுவல்களை இரு சேனல்களும் அளிக்கலாம்.
* லோக்சபா டிவி மகாதேவ் சாலை கட்டிடத்திலும், ராஜ்யசபா டிவி தால்கோத்ரா அரங்கில் உள்ள கட்டிடத்திலும் வாடகையில் இயங்கி வருகின்றன. சன்சாத் டிவி கட்டிடத்தில் இவை ஒருங்கிணைந்து இயங்கலாம்.
அப்படி செய்யும் போது செலவுகள் மிச்சமாகும்.
 இவ்வாறு அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஆராய்ந்து இறுதி அறிக்கை தர மூன்று தனித்தனி குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அறிக்கை தந்ததும் அரசு இறுதி முடிவெடுக்கும்.   மொத்தத்தில் இரண்டு டிவிக்களையும் ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை அளிக்கவும், கட்டுப்படுத்தவும் தான் இந்த ஒருங்கிணைப்பு பயன்படும். வெளிப்படை தன்மை குறையும் வாய்ப்பு உள்ளது என்று  அதிகாரிகள் மட்டத்தில் கருத்து  தெரிவிக்கப்பட்டது.

நேரடி ஒளிபரப்பு வரும்...வராது...
நாடாளுமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு நடக்கும் போது, சில நிகழ்வுகள் வந்து விடும் வாய்ப்பு அதிகம். இனி அப்படி வருமா என்பது கேள்விக்குறி தான்; செலவு குறைப்பு என்றாலும், கட்டுப்பாடுகளும் வருமா என்பது கமிட்டி அறிக்கை வந்ததும் தான் தெரியும்  என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்ககப்பட்டது.

Tags : Barley ,Rajyasaba ,show , Lok Sabha TV, Rajyasaba TV
× RELATED தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக...