×

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன நிதி மோசடி காங். தலைவர் அகமது படேலிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை

புதுடெல்லி:  கடன் மோசடி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலிடம் அமலாக்கத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். குஜராத்தை சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கிகளில் ரூ 14,500 கோடி கடன் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் நிதின் சந்த் சேரா, சேதன் சந்த்சேரா, தீப்தி சந்த் சேரா மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சிபிஐ இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனர்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, அவர்கள் மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தற்போது நைஜீரியாவில் இருப்பதாகவும் அவர்களை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே அகமது படேலின் மகன் பைசல், மருமகன் இர்பான் ஆகியோரிடம் அமலாக்கத் துறை இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் பொருளாளரும், கட்சியின் தலைவர் சோனியாவின் ஆலோசகருமான அகமது படேலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக வயதானவர்கள் வெளியே செல்லக் கூடாது என்று அரசு உத்தரவிட்டிருப்பதை அகமது படேல் சுட்டி காட்டி,  விசாரணைக்கு போக மறுத்தார். இதனால்,  டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்துக்கு அமலாக்க அதிகாரிகள் நேரடியாக சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Ahmed Patel ,Sterling Biotech Corporate Finance Fraud Cong ,Enforcement Department ,investigations , Sterling Biotech Institute, Financial Fraud, Congressman Ahmed Patel, Enforcement Department
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...