×

சீனா படைகளை குவித்து வருவதால் எல்லையில் ஏவுகணையை நிறுத்தியது இந்தியா: போர் பதற்றம் தொடர்ந்து நீட்டிப்பு

புதுடெல்லி: இந்திய எல்லைக்கு அருகே சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால், லடாக் எல்லையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி உள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகமாகி இருக்கிறது.   கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 15, 16ம் தேதியில் இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் சுமார் 40 பேரும் பலியாயினர். இதனால் லடாக் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. அதே சமயம், பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவ, தூதரக ரீதியாக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வரும் இடங்களுக்கு அருகே அந்நாட்டு விமானப்படை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ரோந்து வருகின்றன. எல்லை கட்டுப்பாடு கோட்டிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவுக்கு அருகில் சீன போர் விமானங்கள் அடிக்கடி பறந்து ரோந்து செல்கின்றன. இதனால், சீன ராணுவம் மற்றும் அதன் விமானப்படை எந்த தவறான செயலிலும் ஈடுபடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவமும் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தி இருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் உறுதி செய்துள்ளன.

இதன் மூலம், பதற்றம் மிகுந்த பகுதியில் எந்த எதிரி போர் விமானங்கள் பறப்பதையும் தடுக்க முடியும். இதில் தரையிலிருந்து வான் இலக்கை தகர்க்கும் அதிநவீன ஆகாஷ் ஏவுகணையும் இடம் பெற்றுள்ளது. இது அதிவிரைவாக பறக்கும் போர் விமானங்களையும், டிரோன்களையும் சில நொடிகளில் மிகத்துல்லியமாக தாக்கி வீழ்த்தும் திறன் கொண்டவை. அதோடு, இந்திய விமானப்படையின் போர் விமானங்களும் கிழக்கு லடாக் பகுதியில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. சில நிமிடங்களில் அவை சமவெளியில் உள்ள விமான தளங்களில் இருந்து பறந்து எல்லை பகுதிக்கு நகரும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

மேலும், கண்காணிப்பு வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் பார்வையிலிருந்து எந்த எதிரி நாட்டு விமானமும் தப்ப முடியாத அளவுக்கு கண்காணிப்பு அதிதீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. லடாக் எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்படும் என இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டிய நிலையில், சீன விமானங்கள் எல்லைக்கு அருகே பறப்பதும், இந்திய ராணுவம் வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகளை அமைத்திருப்பதும் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இருதரப்பிலும் எல்லைகள் படைகள் குவிக்கப்படுவதாலும், ஏவுகணைகள் நிறுத்தப்படுவதாலும் போர் பதற்றம் அதிகமாகி இருக்கிறது.

ஆயுதங்களை குவிக்கும் சீனா
கடந்த சில வாரங்களாகவே சீன ராணுவம் அதிதிறன் படைத்த போர் விமானமான சுகாய் 30 மற்றும் சக்தி வாய்ந்த அதன் வெடி பொருட்களையும் இந்திய எல்லைக்கு மிக அருகில் நகர்த்தி வருகிறது. இந்திய நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவு வரை அதன் விமான ரோந்து பணியையும் நீட்டித்துள்ளது. தவுலக் பெக் ஓல்டியின் சப் செக்டார் நார்த், கல்வான் பள்ளத்தாக்கின் பேட்ரோலிங் பாயின்ட் 14, 15, 17 மற்றும் 17ஏ, பாங்காங்க் திசோ, பிங்கர் ஏரியாவை ஒட்டிய ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலும் சீன போர் விமானங்கள் வாலாட்டிக் கொண்டிருக்கின்றன.

* மே முதல் வாரத்தில் சீனா இந்திய எல்லைக்குள் அத்துமீற முயற்சித்த போதே, இந்திய விமானப்படை தனது சுகோய்-20 எம்கேஐ விமானத்தை கிழக்கு லடாக்கிற்கு அனுப்பியது.
* கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை ஒட்டி சீன ராணுவம் கட்டமைப்புகளை அமைத்துள்ள இடத்திற்கு அருகில் வரை அந்நாட்டு ஹெலிகாப்டர்கள் வந்து செல்கின்றன.
* சீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடிக்கடி எல்லையில் நெருங்கி வருவதால், சரியான பதிலடி தரும் வகையில் இந்திய வான்பாதுகாப்பு ஏவுகணை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


Tags : India ,border ,troops ,China , China Forces, Missile, India
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது