×

இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு எதிரொலி சென்னை முழுவதும் காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள்

* சமூக இடைவெளியை கொஞ்சம் கூட மதிக்கவில்லை
* ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு  பொருட்கள் வாங்கினர்
* கொரோனா வைரஸை விலைக்கு வாங்கி சென்றனர்

சென்னை: சென்னை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை முழுவதும் காய்கறி, மளிகை கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கொஞ்சம் கூட மதிக்காமல், ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு  பொருட்களை வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ‌தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை துவம்சம் செய்து வரும் கொரோனா வைரஸ், தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில்  500, 1000, 1500 என்ற அளவில் இருந்த பாதிப்பு, கடந்த சில தினங்களாக 2000ஐ நெருங்கி வருகிறது. நேற்று சென்னையில் மட்டும் 1939 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். 46 பேர் பலியாகினர். இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் தினந்தோறும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, உயிர் பலி அதிகரிப்பு என்று மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்பற்றி சென்னை மக்கள் கவலைப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மளிகை, காய்கறி, ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகள், பத்திரிகைகள் இயங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டை வீட்டு வெளியேறி தெருக்களில் சுற்றி திரிந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கத்தான் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சென்னை மக்கள் நேற்று காய்கறி, மளிகைக் கடைகளில் குவிந்தனர். அதுவும் அரசு கடைபிடிக்க சொன்ன எந்த அறிவுரைகளும் கடைபிடிக்கப்படவில்லை. சமூக இடைவெளி என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு கூட்டம் கூட்டமாக ஒரு இடத்தில் குவிந்து பொருட்களை வாங்கி சென்றனர். பல இடங்களில் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு பொருட்களை வாங்கிய காட்சியை காண முடிந்தது. பலர் குறைந்தபட்சம் மாஸ்க் கூட அணியாமல் கடைவீதியில் சுற்றி திரிந்தனர்‌. கூட்டத்துக்கு மத்தியில் ஒவ்வொருவரும் தானாக நோயை விலைக்கு வாங்கும் நிலைதான் பல்வேறு இடங்களில் நேற்று காணப்பட்டது. ஊரடங்கின் போது கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் தான் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவ காரணமாக கூறப்பட்டது.

அந்த நிலைதான் நேற்று காய்கறி, மளிகைக் கடைகளில் கூட்டம் நிரம்பி காட்சியளித்தது. ஏதோ ஷாப்பிங் போவது போல குடும்பத்தில் உள்ள அனைவரும் பொருட்களை வாங்க நேற்று காலை முதல் திரண்டு வந்திருந்தனர். ஒவ்வொரு கடைக்காரரும் வியாபாரம் நடந்தால் போதும் என்று நினைத்து கூட்டத்தை பொருட்படுத்தாமல்
பொருட்களை வழங்கினர். இதே நிலை தான் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் காணப்பட்டது.

‌இன்று ஒருநாள் தான் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு. நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் இயங்கலாம். அப்படியிருக்கும் போது ஒரு நாளில் இவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன. ஒருநாள் காய்கறி, மளிகை பொருட்களை வாங்காவிட்டால் குடியா மூழ்கி போகும் என்று நேற்று திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து வீடுகளில் முடங்கி வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் இப்படியே கூட்டம் கூடினால் எத்தனை லாக்டவுன் போட்டாலும் கொரோனா பாதிப்பு குறையாது என்றும் அவர்கள் தங்கள் மனக்குமுறலை தெரிவித்தனர்.

முழு ஊரடங்கில் வெளியே வந்தால் கைது
கொரோனா பரவலை தடுக்க இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி இல்லை. பால் மற்றும் மருத்துவ பணிகள், பத்திரிகைகள் சார்ந்த வாகனங்கள் மட்டும் இயங்கலாம். மருந்து கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவை தவிர யாரும் வெளியே வரக்கூடாது. இதை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நடந்து செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் இவற்றை இதனை இணைக்கும் சாலைகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்படும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த 5 ஆயிரம் அதிகாரிகள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : grocery stores ,Chennai , Whole curfew, Chennai, vegetable, grocery stores, people
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்