×

கொரோனா தொற்று பரவும் ஆபத்தால் 3 மாதமாக முழுமையாக மூடிக்கிடக்கும் தியேட்டர், ஜிம், பார், பியூட்டி பார்லர்கள்

* டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை
* உரிமையாளர்கள், ஊழியர்கள் குமுறல்

சென்னை: கொரோனா கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி, வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் என அனைத்தையும் வாட்டி வதைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தையும், தமிழகத்தில் தினமும் 3 ஆயிரம் பேர் என 70 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதை, கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பல்வேறு தொழில்கள், நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக கூறி, ஊரடங்கில் அரசு சில தளர்வுகளை கொண்டு வந்தது. கட்டுப்பாடுகளுடன் சில நிறுவனங்கள் இயங்கவும், கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் மக்களையே முழுக்க  நம்பி இருந்த திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், மதுபான பார்கள், உள் விளையாட்டு அரங்குகள் திறக்க அரசு அனுமதி அளிக்கவே இல்லை.

கடந்த மார்ச்சில் மூடிய இவைகள் எந்தவித வருமானமும் இல்லாமல் கடந்த 3 மாதங்களாக முழுமையாக மூடி கிடக்கின்றனர். ஆனால், இந்த இடங்களில் வேலை செய்து வந்தவர்களுக்கு சம்பளம், இடத்திற்கு வாடகை, என அனைத்தையும் வருமானம் இன்றி கொடுக்கும் நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எப்படியும் கொரோனா ஒழிந்து, ஒரு முடிவு வரும் என்று உரிமையாளர்கள் இருந்தாலும், அதிகரித்து வருகிறதே தவிர, குறைவதாக தெரியவில்லை. எந்த பலனும் கிடைக்காமல் தாங்கள் நம்பி இருந்த தொழிலில் மிகவும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். வருகிற டிசம்பர் வரை இந்த 5 தொழில்களும் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஆல்பர்ட் திரையரங்க மேனேஜர் மாரியப்பன் கூறியதாவது: திரையரங்குகள் முழுக்க முழுக்க மக்கள் கூட்டத்தையே நம்பியுள்ள ஒரு தொழில். எவ்வளவு கூட்டம் கூடுகிறதோ அதில்தான் படத்தின் வெற்றியும், திரையரங்கின் வருமானமும் உள்ளது. ஆனால் திரையரங்குகள், எந்த கூட்டத்தை நம்பி இருந்தோமோ அந்த கூட்டத்தால் தான் தற்போது கொரோனா பரவி வருகிறது. தினமும் வருமானமும், செலவுமாக இருந்தோம். தற்போது செலவு மட்டும்தான் உள்ளது. வருமானம் இல்லை. பராமரிப்பு பணிகள், இயந்திரங்கள் ஆபரேட்டர்கள் என அனைத்தும் தினமும் செய்ய வேண்டியுள்ளது. இல்லையென்றால் பழுதாகி விடும். அவர்களுக்கு சம்பளம் தருவதில் முதல் மாதங்களில் எந்த சிரமமுமில்லை.

ஆனால் மாதங்கள் அதிகரிக்க அதிகரிக்க சம்பளம் தருவதில் சிரமம் ஏற்படுகிறது. இருந்தாலும் அவர்களை கைவிடும் நிலையில் நாங்கள் இல்லை.
தற்போது நமக்காக உழைத்த ஊழியர்களை கைவிட்டால் தவறானது. எனவே கொரோனாவுக்கு விரைவாக முடிவு வர வேண்டும். மக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்றி செயல்பட வேண்டும். அரசையும் குறை சொல்லிவிட முடியாது. தொழிலாளர்களுக்காவது ஏதாவது உதவி செய்யலாம்.  இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், சைதாப்பேட்டையில் உள்ள பிபி பிட்னஸ் ஸ்டுடியோ உரிமையாளர் ராஜேஷ் கூறியதாவது:  எங்களுடைய ஜிம் 8 ஆயிரம் சதுர அடியில் இயங்கி வருகிறது. மாதம் 1.50 லட்சம் வாடகை செலுத்தி வருகிறோம். 15 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக எந்த வருமானமுமில்லாமல், வாடகை பிரச்னை ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை நம்பி ஜிம் பயிற்சியார்கள் உள்ளனர். அந்த வாலிபர்கள் இதை நம்பித்தான் உள்ளனர். ஆனால் வேலையில்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையை பொறுத்தவரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜிம் உள்ளது. இதனை நம்பி 20 பேர் ஒவ்வொரு ஜிம்மிலும் வேலை செய்து வந்தனர். அவர்களது குடும்பத்தினரை சேர்த்து குறைந்தது 50 ஆயிரம்  பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே அரசு கடும் கஷ்டத்தில் உள்ள எங்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளுடன் ஜிம் திறக்க அனுமதிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். எனவே ஜிம் திறக்க அரசு வழி வகை செய்ய வேண்டும். வேறு எந்த உதவியும் வேண்டாம்.

ஏனென்றால், வருமானத்திற்கு வேறு வழியில்லாமலே ஜிம்மை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.முக்கியமாக எப்போதும் கூட்டத்துக்கு குறையில்லாமலும், பரபரப்பாக காணப்படும் மதுபான பார்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. டாஸ்மாக் திறந்து அரசு வருமானம் பார்த்தாலும், பார்கள் வருமானமின்றி உள்ளன. பெரும்பாலும் பாரில் வேலை செய்பவர்கள் அன்றாடம் வரும் பணத்தையே செலவுக்கு வைத்து குடும்பத்தை நடத்தி வந்தனர். இதனால் கொரோனா எப்போ முடியும், தங்களின் வாழ்க்கை எப்போ விடியும் என்று தெரியாமல் மக்களையே நம்பி இருந்தவர்கள் கஷ்டத்தில், உதவி கோரி அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.



Tags : Theater ,gym ,bar , Corona, Yater, Jim, Bar, Beauty Parlor
× RELATED பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு