×

மன அழுத்தத்தால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க கொரோனா வார்டுகளில் புத்தக மையம் அமையுங்கள்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வார்டுகள் மற்றும் மருத்துவமனைகளில் புத்தக மையங்களை அமையுங்கள் என அரசுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.  
உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஏற்றம் கண்டு பின்னர் மெல்ல, மெல்ல குறையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கடந்த ஒரு மாதமாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்றத்தை மட்டுமே கண்டுவருகிறது. சற்றும் குறைந்தபாடில்லை. கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாழ்வு தேடி சென்னை வந்தவர்கள் எல்லாம் உயிர் பிழைத்தால் போதும் என்று சொந்த ஊர்களுக்கு படை எடுத்துச்செல்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது போல் கொரோனாவிற்கு பயந்தும், வார்டுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தவாறு உள்ளது. இதுவரை தமிழகத்தில் 5 பேர் கொரோனா வார்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்று தற்கொலை செய்து கொள்வதற்கு முதன்மையாக அமைவது அவர்களின் பயம்  என்கின்றனர் மனநல மருத்துவர்கள். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது, கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களின் மனநிலையை அரசு எப்படி சரிசெய்ய வேண்டும் என மனநல மருத்துவர்கள் தரப்பில் கூறியதாவது: எந்த ஒரு நோய் வந்துவிட்டாலும் அதற்கு நாம் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதை விடுத்து நாம் பயந்து ஓடக்கூடாது.

யாருக்கும் பயப்படாதவர்கள் கூட தற்போது ‘கொரோனா’ என்ற ஒற்றை வார்த்தைக்கு பயந்து வருகிறார்கள். கொரோனா வந்தாலே உயிர்போய்விடும் என்று பொதுவாக மக்கள் மத்தியில் நிலவும் கருத்துகளே இதுபோன்ற பயத்திற்கு காரணம். முதலில் மக்கள் கொரோனா மீதுள்ள பயத்தை விட வேண்டும். அதற்கு பதிலாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, கூட்டமாக கூடுவதை தவிர்ப்பது, தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, கைகளை நன்றாக கழுவுவது போன்றவையே கொரோனாவிடம் இருந்து நாம் தப்பிக்க இருக்கும் வழி. இந்த வழியை பின்பற்றினாலே போதும். 95 சதவீதம் கொரோனாவிடம் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும். இதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் ஏராளமானோர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதை காண முடிகிறது.

கொரோனா தொற்று நமக்கு சரியாகிவிடுமா, இந்த சமூகம் நம்மை எப்படி ஏற்றுக்கொள்ளும், அனைவரும் நம்மை ஒதுக்கிவைத்து விடுவார்களோ, பழைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது போன்ற மன உளைச்சல்களே கொரோனா வார்டுகளில் ஏற்படும் தற்கொலைக்கு காரணமாக முடிகிறது. கொரோனாவை காய்ச்சல் போல் அணுகுவதை விடுத்து நாம் எச்.ஐ.வி போன்ற பெரும் நோயாக கருதி வருகிறோம். அரசு கொரோனா குறித்து பயத்தை ஏற்படுத்தாமல் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க முடியும்.

மேலும், கொரோனா வார்டுகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும் புத்தக மையங்களை அரசு ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு காலை, மாலை என தினம்தோறும் மன உறுதி அளிக்கும் வகையில் அவர்களிடம் பேச மனநல மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் அவர்களுக்கு மன ஆறுதல் மட்டுமே கொரோனாவை குணப்படுத்தும் மருந்தாக இருக்கும்.இவ்வாறு கூறினர்.

Tags : Book Center ,Corona Wards , எ
× RELATED 'நீதிமன்றங்களை திறக்காவிட்டால்...