×

சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட 62 சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை:  சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில்  பங்கேற்ற 62 சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்களுக்கு  இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்கள் சார்பாக வக்கீல்  பாலடெய்சி  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட  எங்களுக்கு அரசு  பதவி உயர்வு வழங்கியது.கடந்த 2004ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை  எங்களுக்கு படிப்படியாக சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.  தற்போது சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு எங்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்காமல் கடந்த 2008ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் ஆனவர்களுக்கு  பதவி உயர்வு  வழங்க ஒரு பட்டியல் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல் சட்டவிரோதமானது. கடந்த 2004ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்ற  எங்களுக்கு பதவி உயர்வு கொடுத்து விட்டுத்தான் மற்றவர்களுக்கு  பதவி வழங்க வேண்டும். அரசின் முடிவால்  நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு பின்னால் பணிக்கு வந்தவர்களுக்கு பதவி வழங்கினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே தற்போது தயாரித்துள்ள  பட்டியலை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும். எங்கள் 62 பேருக்கு பதவிகள் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு நாளை  விசாரணைக்கு வருகிறது.

Tags : Sub-Inspectors ,Sandalwood Trafficking Veerappan ,hearing ,High Court , Sandalwood Trafficking, 62 Sub-Inspectors, Promoted, Icort
× RELATED சப். இன்ஸ்பெக்டர் தேர்வில் 4 காவலர்கள் தேர்ச்சி