×

ஒரே நாளில் 7 பேர் பலி; 218 பேர் பாதிப்பு: மதுரையில் இன்று தீவிர ஊரடங்கு: அனைத்துக் கடைகளும் அடைப்பு

மதுரை: மதுரையில் நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். 218 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி அனைத்துக்கடைகளும் அடைக்கப்படும். தடையை மீறி வாகனங்களில் சுற்றினால் வழக்கு பதிந்து கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது.  இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், மதுரையிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் கடந்த ஜூன் 23 நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இங்கு, ஊரடங்கின் உச்சமாக இன்று  ‘தீவிர முழு ஊரடங்கு’ அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு துவங்கிய ‘தீவிர முழு ஊரடங்கால்’ நாளை காலை 6 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. அத்தியாவசியப்பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களும் முகக்கவசம், சமூக இடைவெளியுடன் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர மருத்துவ சிகிச்சை தவிர மதுரைக்குள் வர இ-பாஸ் அனுமதி முழுமையாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மருந்து கடைகள் தவிர்த்து, நகரின் ஒட்டுமொத்த அனைத்து கடைகள், மார்க்கெட்டுகள்  மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. விதிமீறி வருவோர் மீது வழக்கு, பறிமுதல் மற்றும் அபராதம், கைது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.


Tags : victims ,shops ,Madurai , Madurai, Curfew, All Stores
× RELATED கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி...