×

நாகை, தஞ்சை கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு: விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

திருச்சி: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 2வாரங்களாகியும் நாகை, தஞ்சை கடைமடை பகுதிகளுக்கு இதுவரை வராததால், ஒரு லட்சம் ஏக்கர் குறுவை நெல் நட முடியாத அவலம் உள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளன. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் 12ம்தேதி திறக்கப்பட்டு ஜனவரி 28ம்தேதி மூடப்படும். இந்த கால கட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இதில் பெரும்பான்மையான ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும், ஆறுகளில் காலதாமதமாக பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது பாலப்பணிகள் முடியாததாலும் ஆறுகளில் தண்ணீர் திறக்காமல் உள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர். நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நெல் விதைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் முளைத்தால் தான் அடுத்து தாளடியும், அதைத் தொடர்ந்து உளுந்து, பயிர்கள் சாகுபடி செய்யலாம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் நேரடி நெல் விதைப்பு செய்த குறுவை நெல் விதைகள் முளைத்தால் தான் அக்டோபர் முதல் வாரத்தில் அறுவடை செய்வதோடு, உடன் தாளடி நடவு பணியை முடித்து பருவ மழை, வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கலாம். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து மழைக்காகவும், மேட்டூர் அணை தண்ணீருக்காவும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகிறது. கல்லணை திறந்து 10 நாட்களாகிறது. கல்லணை திறந்து 3 நாட்களில் நாகை மாவட்டத்தில் கடை மடைக்கு தண்ணீர் வந்துவிடும். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் சித்தாறு, வெட்டாறு, கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெள்ளையாறு, அடப்பாறு உள்ளிட்ட ஆறுகளில் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.  இதில் சில ஆறுகளில் வரும் தண்ணீர் குறைந்த அளவில் வருவதால் ஆறுகளில் இருந்து வாய்க்கால்களில் ஏறிசெல்லும் அளவிற்கு தண்ணீர் வராததால் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் உள்ளது. இதனால் நேரடி செய்யப்பட்ட குறுவை நெல் விதைகளை முளைக்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயத்தில் உள்ளது. காலதாமதமாக குறுவை நெல் விதையை முளைக்க வைத்தால் அக்டோபர் மாத பருவ, கனமழையில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன், தாளடி பயிர் செய்வதும் பாதிக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது.                                                                                                                              
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் , சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளான பள்ளத்தூர், ஆண்டிகாடு, இரண்டாம்புளிக்காடு, கழனிவாசல்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்களில் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் ஒரு லட்சம் ஏக்கர் குறுவை நெல் நட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : area ,Nagai ,Thanjamalamada , Naga, Tanjore, Water, Farmers, Livelihood
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு