×

பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பேராசிரியர் பாலசுப்பிரமணியம் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் பெருந்தகை ஆகியோரின் அன்பையும், அரவணைப்பையும், மதிப்பையும், பாராட்டையும் வெகுவாகப் பெற்று, தென் பாண்டித் தமிழகத்தின் செந்தமிழ் தென்றலாக உலவி நம்முடன்  இரண்டறக் கலந்திருந்த பேராசிரியர்  மு.பி.பாலசுப்பிரமணியம்  மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி இன்று அதிகாலையிலேயே அறிந்து அளவிலா வேதனையுற்றேன்.

நேற்று மாலைதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நலம் குறித்து அவரது மகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன். இன்று காலை வந்த துயரச் செய்தி என்னை மீளாச் சோகத்தில் ஆழ்த்தி விட்டது. அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக 35 வருடங்களுக்கு மேலாகவும் - அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி, அன்னை தமிழை அனைவரின் இதயத்திலும், குறிப்பாக மாணவமணிகளிடையே வீற்றிருக்கச் செய்ய அரும்பாடு பட்டவர். திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறையில், அறிவியல் தமிழ் மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு தமிழ் வளர்ச்சிப் பணியில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக நின்றவர்.

தமிழ் இலக்கியத்தில் பல அரிய நூல்களை இயற்றிய அவர் - தமிழ்ச் செம்மொழி மத்திய நிறுவனத்தின் உறுப்பினராக சீர்மிகு பணிகளைத் திறம்பட நிறைவேற்றியவர். மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி கலைத்துறைக்கும் தன் கடமையை ஆற்றியவர். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று அங்கு தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளிலும், உலகத் தமிழ் மாநாட்டிலும் பங்கேற்று தமிழ் மொழியின் பெருமைகளை உலகெங்கும் பரவச் செய்தவர். கழக இலக்கியப் பணிகளில் என்றைக்கும் தணியாத ஆர்வமும், தளராத ஊக்கமும் கொண்ட அவர், திராவிட இயக்கச் சிந்தனைகள் செழித்துப் பூத்து மணம்பரப்பும் மாபெரும் தோட்டமாகவே விளங்கியவர்.

‘தமிழாலயம்’ என்ற இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்தி - தொய்விலாத் தமிழ்த்தொண்டாற்றிய அவரை இன்றைக்கு தமிழ் கூறு நல்லுலகம் இழந்திருக்கிறது; நானும் இழந்திருக்கிறேன். இந்த மாபெரும் திராவிட இயக்கம்,  தகுதியும் சான்றாண்மையும் நிறைந்த தனயர்களில் ஒருவரை இழந்து நிற்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

தலைவர் கலைஞர் மீதும், கழகத்தின் மீதும், எனது தந்தை முரசொலி மாறன் மீதும் மாறாப் பற்று கொண்டவர். மு.க.ஸ்டாலின் மீது பேரன்பு கொண்டவர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கூட அவருடைய தமிழாலயம் இதழில் எனது தந்தையை பற்றிய முகப்பு கட்டுரையை வெளியிட்டிருந்தார். எந்த ஒரு சந்தர்பத்திலும் கழகத்தை விட்டுக் கொடுக்காமல் வாதம் செய்திடும் கொள்கை பிடிப்புள்ளவர். அப்படிப் பட்ட போர்குணம் கொண்ட பேராசிரியர் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்’ என்று கூறியுள்ளார்.


Tags : MK Balasubramaniam ,demise ,MK Stalin ,Prof. , Prof. MP Balasubramaniam, Forgotten, MK Stalin, condolences
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...