×

சென்னை மாநகராட்சி ஆசிரியர்களின் விருப்பத்தை கேட்காமல் கொரோனா பணியில் ஈடுபடுத்த தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

* கட்டுப்பாட்டு மையங்களில்  தனி மனித விலகல் பின்பற்றப்படாததால் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது

சென்னை: சென்னை மாநகராட்சி  பள்ளிகளில் பணியாற்றும் 50 வயதுக்கு குறைந்த ஆசிரியர்களின் விருப்பத்தை கேட்காமல், அவர்களை பாதுகாப்பு மைய பணிக்கு அமர்த்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிக்கு அனைத்து துறை பணியாளர்களையும் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பது, கவுன்சலிங் வழங்குவது போன்ற பணிகளில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை பணியமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த பணிகளுக்கு 50 வயதுக்கு குறைவான ஆசிரியர்களிடம், அவர்களின் விருப்பத்தை பெற்று பணியமர்த்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர்களின் விருப்பத்தை பெறாமல் அவர்களை கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளில் பணியமர்த்த தடை விதிக்க கோரி  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை மாவட்ட செயலாளர் ஜஸ்டின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 1,200 ஆசிரியர்கள் ஷிப்ட் முறையில் கொரோனா கட்டுப்பாட்டு மைய பணிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் விருப்பங்களை கேட்காமல், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு மைய பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏதும் வழங்கப்படவில்லை. கட்டுப்பாட்டு மையங்களில் தனி மனித விலகல் பின்பற்றப்படாததால் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. வீடுகளில் இருந்து கவுன்சலிங் வழங்க ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். எனவே, தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களை கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Madhya Pradesh Coroner ,authors ,Work Chennai Corporations ,hearing ,High Court ,Corona , Madras Corporation Teachers, Corona, High Court
× RELATED குரூப்-1 தேர்வு எழுதியவர்களிடம் அரசு...