×

சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர்: அருண் ஐஜியாக அங்கீகாரம்: மத்திய அரசு உத்தரவு

சென்னை: சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருணை ஐஜியாக அங்கீகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் உயர் அதிகாரிகளை பொறுத்தவரை ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வு எழுதி, டிஎஸ்பியாக பணியில் சேரும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகு ஐபிஎஸ் அந்தஸ்து பெற்று பதவி உயர்பெறும்போது, அவர்கள் வகிக்கும் ஒவ்வொரு பதவிக்கும் மத்திய அரசு அங்கீகாரம் வழங்கும். மத்திய அரசு எந்த பதவிக்கு (கேடர்) அங்கீகாரம் வழங்குகிறதோ, அதே தகுதிக்கான பதவியில்தான் அவரை மத்திய அரசுப் பணியில் நியமிக்க முடியும்.இவ்வாறு மத்திய அரசு ஒரு அதிகாரியை அங்கீகரிக்க மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் தனியாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டிதான், குற்றச்சாட்டுகள் இல்லாத அதிகாரிகளை தேர்வு செய்து அங்கீகரிக்கும். இவ்வாறு அங்கீகாரம் செய்யப்பட்ட அதிகாரிகள்தான் மத்திய அரசின் உளவுப் பிரிவு (ஐபி), சிபிஐ போன்ற முக்கியமான பதவிகளில் அமர்த்தப்படுவார்கள். அதில், சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக உள்ள அருண், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ், பஞ்சாப்பை சேர்ந்த சிவ்குமார் வர்மா, குஜராத்தை சேர்ந்த நிபுனா மிலின்த்
ஆகியோருக்கு ஐஜி பதவிக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளும் மத்திய அரசுப் பணிக்கு சென்றால் இதே ஐஜி அந்தஸ்திலான பதவியில் சேரலாம்.

அதேநேரத்தில் மாநிலத்தில் உள்ள பல ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசில் அவர்கள் வகிக்கும் பதவிக்கு இணையான அங்கீகாரத்தை பெறாமல் உள்ளனர். குறிப்பாக டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி அந்தஸ்தில் உள்ளவர்கள் கூட, இன்னும் மத்திய அரசில் டிஐஜி மற்றும் ஐஜி அந்தஸ்திலான அங்கீகாரம் மட்டுமே பெற்றுள்ளனர். இதனால்தான் பலர் மத்திய அரசுப் பணிக்கே செல்லாமல் மாநில அரசுப் பதவியிலேயே பணியாற்றி ஓய்வு பெற்று விடுகின்றனர்.

Tags : Arun Aiji ,Commissioner of Transport , Chennai Transport, Additional Commissioner, Arun IG, Central Government
× RELATED போக்குவரத்து துறையில் கூடுதல் கமிஷனர் நியமனம்