×

கொரோனா பீதியில் விமான நிலைய ஊழியர்கள்: தரமான உபகரணங்கள் வழங்காததால் அதிருப்தி

சென்னை: கடந்த 3 நாளில் 61 விமான பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தூய்மை பணியாளர்களுக்கு தரமான உபகரணங்கள் வழங்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயத்தில் பணியாற்றுகின்றனர். கொரோனா ஊரடங்கால் விமான சேவை நிறுத்தப்பட்டது. கடந்த மே 25ம் தேதி முதல் சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது. இங்கு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளை மருத்துவ குழுவினர் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்து அனுப்புகின்றனர். கடந்த 23ம் தேதி வரை 30 நாட்களில் 751 விமானங்களில் 46,968 பயணிகள் சென்னை வந்தனர். அவர்களை ேசாதனை செய்ததில், 55 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் ஒன்று, இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது தெரிந்தது. கடந்த 24ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை 3 தினங்களில் 91 உள்நாட்டு விமானங்களில் 4,253 பயணிகள் வந்ததில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது விமானநிலைய அதிகாரிகளையும், மருத்துவ குழுவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவர்கள் அனைவருமே டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்த விமான பயணிகள் என்று கூறப்படுகிறது. இது, விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பயணிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மற்றும் குப்பை தொட்டிகளை விமான நிலைய தூய்மை பணியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் சுத்தப்படுத்துகின்றனர். எனவே அவர்கள் தங்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க கவச ஆடைகள், தரமான மாஸ்க்குகள், கிளவுஸ்கள் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். தற்போது சென்னை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மருத்துவ குழுவினருக்கு கவச உடைகள் தரமான கிளவுஸ்கள், மாஸ்க்குகள் வழங்கப்படுவதாகவும், ஆனால் தங்களுக்கு கவச உடைகள் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குறை கூறுகின்றனர்.


Tags : Airport staff ,Corona Panic , Corona, airport staff, equipment
× RELATED கொரோனா: பீதி கிளப்பும் புது வைரஸ்