×

தமிழகத்தில் கொரோனா உச்சம்.! உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது..!! ஒரேநாளில் 3713 பேர் பாதிப்பு

* சென்னை நகருக்கு இணையாக மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது.
* மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
* நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
* சென்னையில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று அதிகபட்சமாக 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் நேற்றும் மூன்றாவது நாளாக உச்சபட்சமாக 3,713 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,939 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும் வந்த பயணிகளை விமான நிலையங்களில் சோதனை நடத்தாமல், விட்டு விட்டதால் அவர்கள் மூலம் மாநிலத்தில் பலருக்கும் பரவியது. பின்னர், கோயம்பேடு சந்தை மூலம் சென்னை மாநகர் முழுவதும் பரவியது.

இந்த தகவல் வெளியானதும், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஊழியர்கள் பயத்தில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவியது. பின்னர் வியாபாரிகள் மற்றும் கோயம்பேடு சென்று வந்த மக்கள் மூலம் நகர் முழுவதும் பரவியது.  தற்போது, சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றதால், பலர் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா பரவலாக பரவியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை நகருக்கு இணையாக மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதேநேரத்தில், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இதுவரை 10 லட்சத்து 77 ஆயிரத்து 454 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 34,805 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் செங்கல்பட்டில் 248, அரியலூரில் 4, கோவை 33,  கடலூர் 9, தர்மபுரி 2, திண்டுக்கல் 26, ஈரோடு 14, கள்ளக்குறிச்சி 18, காஞ்சிபுரம் 98, கன்னியாகுமரி 32, கரூர் 1,  கிருஷ்ணகிரி 26, மதுரை 217, நாகப்பட்டினம் 31, நாமக்கல் 3, நீலகிரி 10, பெரம்பலூர் 3, புதுக்கோட்டை 18, ராமநாதபுரம் 93, ராணிப்பேட்டை 96, சேலம் 34, சிவகங்கை 28, தென்காசி 9, தஞ்சாவூர் 16, தேனி 35, திருப்பத்தூர் 16, திருவள்ளூர் 146, திருவண்ணாமலை 110,

திருவாரூர் 46, தூத்துக்குடி 43, நெல்லை 11, திருப்பூர் 9, திருச்சி 31, வேலூர் 118, விழுப்புரம் 51 என 3,624 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சவூதி அரேபியா 2, சிங்கப்பூர் 2, மலேசியா, மாலத்தீவு, கத்தார், உக்ரைன், பீகார், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வந்தவர்களில் தலா ஒருவருக்கும், கர்நாடகா 40, கேரளா 11, தெலங்கானா 7, மகாராஷ்டிரா 5, குஜராத் 3, டெல்லி 2, மத்திய பிரதேசம் 2, புதுச்சேரி 2, உத்தரபிரதேசம் 2 என 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று 3,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2,737 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர்.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094. தொடர் சிகிச்சையில் 33,213 பேர் உள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 பேரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 46, மதுரை 7, செங்கல்பட்டில் 7, திருவள்ளூர் 3, சிவகங்கை 1, திண்டுக்கல் 1, விருதுநகர் 1, ஈரோடு 1, விழுப்புரம் 1 என நேற்று மட்டும் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் வரை 957 பேர் கொேரானாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில் நேற்று இறந்த 68 பேரையும் சேர்த்து உயிரிழப்பு எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் 40க்கும் மேற்பட்டவர்கள் இறப்பதால் கொரோனா நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 776 பேரும், செங்கல்பட்டில் 75, திருவள்ளூர் 58, காஞ்சிபுரம் 18 என 4 மாவட்டங்களில் மட்டும் 927 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும், நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதில் 2,300 ஆண்கள், 1,412 பெண்கள், 1 திருநங்கை பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் இதுவரை 48,346 ஆண்கள், 29,968 பெண்கள், 21 திருநங்கைகள் என 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 576 மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Corona ,Fatalities , Tamil Nadu, Corona, death
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...