அழகான மணமகளும், குண்டு மாப்பிள்ளையும்... மீம்ஸ் பக்கத்தில் ‘லைக்’ வாங்க நாங்கதான் கிடைச்சமா?... சமூக வலைதள கேலி, கிண்டலுக்கு மணமக்கள் ‘அட்வைஸ்’

கொல்கத்தா: ‘அழகான மணமகளும், குண்டு மாப்பிள்ளையும்’ என்ற தலைப்பில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். அதற்கு அவர்கள், ‘உங்கள் மீம்ஸ் பக்கத்தில் ‘லைக்’ வாங்க நாங்கதான் கிடைச்சமா?’ என்று ‘அட்வைஸ்’ செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் நேசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் படித்து, பட்டமும் பெற்று குடும்பத்தினரின் சம்மத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான எல்லா தம்பதியர்களைப் போல இவர்களும், அவர்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் அவர்களை சமூக வலைதளத்தில் சங்கடப்படுத்தியவர்கள்தான் அதிகம்.

அந்த புகைப்படத்தில் மணமகனான அர்னேஷ் மித்ரா உடல் பருமனுடன் இருப்பதை முன்பின் தெரியாத பலரும் கிண்டல் செய்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை திருடி மீம்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கிண்டல் அடித்துள்ளனர். ஒருசிலர் மட்டுமே அப்படி கிண்டல் செய்வது தவறு என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அந்த மீம்ஸ் பக்கத்தை பார்த்த மணமகள் எக்தாவின் தோழி,  அந்த பக்கத்திற்கான லிங்கையும் எக்தாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைப்பார்த்த எக்தா கோபமுற்று, அந்த மீம்ஸ் பக்கத்தை குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தில் புகார் அளிக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் மணமகன் அர்னேஷ் மித்ராவோ அப்படி செய்யவில்லை. அதற்கு பதிலாக, ‘அவர்கள் மீது புகார் அளிக்க வேண்டாம்; அவர்களுக்கு எனக்கு கிடைத்ததைப்போல அழகான மனைவி கிடைக்காத விரக்தியில் இப்படி பேசுகின்றனர். அவர்கள் பேசிவிட்டு போகட்டும்’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து எக்தா தனது பேஸ்புக் பதிவில், ‘நான் அர்னேஷை காதலிக்க ஆரம்பித்த முதல்நாளில் இருந்தே இதுபோன்ற கேலியும் கிண்டல்களும் வந்தன. இந்த சமூகம் வெறும் உடலை மட்டுமே பார்க்கிறது; மனதையும், நல்ல குணத்தையும் பார்க்க தவறிவிடுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அர்னேஷ் தனது பேஸ்புக் பதிவில், ‘எங்களது புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்த அனைவருக்கும் நன்றி. இவ்வளவு அழகான பெண் என்னுடைய மனைவி என்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை. அவள் எனக்கு குழந்தை பருவத்திலிருந்தே தோழி, என்னுடைய மிக சிறந்த தோழி, இன்று எனக்கு மனைவி. உங்கள் மீம்ஸ் பக்கத்தில் லைக்ஸ் வாங்குவதற்காக கஷ்டப்படுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்கள் பக்கத்தை நடத்துவதற்கு கருத்துக்கள் இல்லாமல் தவிப்பதும் தெரியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கிட்டதிட்ட 11 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த இவர்களில், மனைவி அழகாகவும், கணவன் குண்டாக இருப்பதை சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் கேலியும், கிண்டலும் செய்வதை பலரும் கண்டித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>